ராஜன் குறை
கடந்த வெள்ளியன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வார்தாவில் கட்சி ஊழியர்களிடையே பேசும்போது இந்துத்துவத்துக்கும், பன்மைத்துவத்துக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டியுள்ளார். பாரதீய ஜனதா கட்சி இந்துத்துவத்தை முன்மொழிவதையும், காங்கிரஸ் பன்மைத்துவத்தை வலியுறுத்துவதையும் சுட்டிக்காட்டி இந்தக் கட்சிகளுக்கு இடையிலான முக்கியமான கருத்தியல் முரண் அதுதான் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன் இந்துத்துவா என்பது வேறு இந்து மதம் என்பது வேறு என்பதையும் சுட்டிக்காட்டி இரண்டும் ஒன்றென்றால் இரண்டு வார்த்தைகள் எதற்கு என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். இந்து மதம் வன்முறையைத் தூண்டவில்லை, இந்துத்துவா வன்முறையைத் தூண்டுகிறது என்றும் கூறியுள்ளார்.
கிலாஃபத் இயக்கத்திற்கு (1920) பிறகு இஸ்லாமியர்கள் இந்தியா என்ற பித்ருபூமிக்கு வெளியே உள்ள புனிதமான மையங்களை நம்புகிறார்கள் என்பதை முன்வைத்து உருவான அரச – இறையியல் (Political Theology) இந்துத்துவா. அந்தப் பெயரில் முதலில் ஒரு நூலை எழுதியவர் சாவர்க்கர். இந்துத்துவம் இந்தியா என்ற நிலப்பகுதி இந்துக்களின் பித்ருபூமி என்ற அடிப்படையில் இந்து அடையாளத்தை மையப்படுத்தி அரசியல் செய்வது. அதனடிப்படையில்தான் இந்து ராஷ்டிரம் என்ற கருத்தாக்கமும் உருவானது. இது இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு தனி நாடுகளாகப் பிரிந்து உருவாவதற்கு அச்சாரமிட்டது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அவர்கள் அனைத்து மதத்தினரும், எல்லா மொழியினரும் சேர்ந்து வாழும் பன்மைத்துவ இந்திய தேசத்தையே முன்னிறுத்தினார்கள். ஆனாலும் இரட்டையாட்சி முறையில் 1937ஆம் ஆண்டு தேர்தல்கள் நடந்தபோது, இந்து பெரும்பான்மை தன்னை நிறுவிக்கொள்ளும் வாய்ப்பினை துல்லியமாக உணர்ந்த முஸ்லிம் லீக் பாகிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கியது. இறுதியில் முக்கியமாக பஞ்சாபும், வங்காளமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வடமேற்கில் வேறு பிரதேசங்கள் சேர்க்கப்பட்டு பாகிஸ்தான் என்று ஒரு நாடாகவும், இந்தியா என்று ஒரு நாடாகவும் 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றன. நினைத்துப் பார்க்க முடியாத அளவு மக்கள் இடப்பெயர்ச்சியும், கொடும் வன்முறைக் கலவரங்களும் நடந்தேறின. இதற்குப் பிறகும் காந்தியும், நேருவும் இந்தியாவை இந்துக்கள் நாடாக மாற்றுவதற்கு இடமளிக்கவில்லை. காந்தி இந்துத்துவ கருத்தியலாளர்களால் கொல்லப்பட்டார். நேரு இந்தியாவின் பிரதமராக அடுத்த பதினேழு ஆண்டுகள் ஆட்சி புரிந்து மதசார்பற்ற குடியரசினை வலுவாக உருவாக்கினார்.
இந்த வரலாற்றினை நினைத்துப் பார்க்கும்போது ராகுல் காந்தி கூறுவதுபோல காங்கிரஸ் இந்துத்துவத்துக்கு எதிரான பன்மைத்துவத்தை நிலை நிறுத்தியது என்பது சரிதான் எனத்தோன்றும். ஆனால், அதில் ஒரு பலவீனம் இருந்தது. அதனால்தான் பல்வேறு தருணங்களில் இந்துத்துவ கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் இடமளிக்க நேர்ந்தது. அந்த பலவீனம் என்னவென்றால் அது இந்துத்துவத்தை கட்டமைப்பதில் பார்ப்பனீயத்தின் பங்கு என்ன என்பதை புரிந்துகொள்ள தவறியது. பார்ப்பனீயம் குறித்த விமர்சனத்தைத் தீவிரமாக முன்னெடுக்கத் தவறியது.
**பார்ப்பனீயம் என்பது என்ன? **
இந்த சொல் குறித்து பல விவாதங்கள் இன்றும் நிகழ்கின்றன. இதற்கு சுருக்கமான தெளிவான பொருள் தர வேண்டும் என்றால் அது நால்வர்ண கோட்பாடு எனலாம். அந்த நால்வர்ண கோட்பாடு பிறப்பால் தீர்மானிக்கப்படும் மானுட அடையாளமாகும். அந்த வர்ணங்களில் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்ட வர்ணம் தலையாய இடத்தை வகிப்பது. அவர்கள் பூசாரி வர்க்கமாகவும், கல்வி கற்பவர்களாகவும், பல்வேறு பொதுநல சேவைகளின், சாஸ்திரங்களை, சட்டங்களை வடிப்பது, அரசர்களுக்கு ஆலோசனை சொல்வது என்பது உள்ளிட்ட திறனாளர்களாகவும் வாழ்வார்கள். பொருளுற்பத்தியில் நேரடியாக ஈடுபட மாட்டார்கள். அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தை அரசர்களும் பிறரும், செய்து கொடுக்க வேண்டும். உலகின் எல்லா சமூகங்களிலும் இதுபோன்ற பூசாரி வர்க்கம் உண்டு என்றாலும், பிராமணர்கள் குறித்த வர்ணக் கோட்பாடு மிகவும் வித்தியாசமானது. மார்ஸல் மாஸ் உள்ளிட்ட மானுடவியலாளர்கள் இதுகுறித்து ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். தங்களுக்கு சாதகமான சட்டங்களை பார்ப்பனர்களே எழுதிக்கொண்டு அதை அனைவரும் பின்பற்ற செய்ததை குறித்து ஆராய்ந்துள்ளார்கள். ஒருபுறம் பார்த்தால் பெரும் லட்சியவாதிகளாகத் தெரியும் இந்த பிராமண வர்ணத்தினர், மற்றொருபுறம் சுயநலமும், சூழ்ச்சியும் மிக்கவர்களாக வெளிப்படுவது மிகவும் சுவாரஸ்யமானது.
இந்த வர்ண கோட்பாடுகள், தர்ம சாஸ்திரங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன. இவை எவ்வளவு தூரம் பரவலாகப் பின்பற்றப்பட்டன போன்றவை ஆய்வுக்குரியது என்றாலும், காலனீய ஆட்சிக்காலத்தில் கீழைத்தேய சிந்தனையாளர்கள் இந்த தர்ம சாஸ்திரங்களை இந்துக்களின் பொது விதிமுறைகள் என்றும் அவை இந்துமதத்தின் அடிப்படை என்றும் கட்டமைத்தார்கள். நாடு முழுவதும் இருந்த பார்ப்பன ஜாதிகளே ஆங்கிலம் கற்பதிலும், ஆங்கிலேயர்களின் ஆட்சி, நீதி பரிபாலனம் முதலியவற்றில் பங்கேற்பதிலும் முன்னணி வகித்தார்கள். இந்தியாவின் பரந்த நிலப்பகுதியில் உருவான ஏராளமான சிறிய, பெரிய அரசுகளில் பார்ப்பனர்களின் பங்கேற்பு எத்தகையதாக இருந்தாலும், இந்தியா முழுவதும் நவீன அரசமைப்பின் கீழ் காலனீய காலத்தில் வந்தபோது பார்ப்பனர்களே இந்து மதத்தையும், இந்திய தேசத்தையும் கட்டமைப்பவர்களாக மாறினார்கள். இதன் காரணமாக வர்ண கோட்பாட்டினால் பார்ப்பனர்களைவிட தாழ்ந்தவர்களாக கருதப்பட்ட சூத்திரர்கள், அவர்ணர்களான பஞ்சமர்கள் போன்றவர்கள் முற்றிலும் அசமத்துவமான நிலையிலே நவீன சமூக அமைப்பினுள் நுழைந்தார்கள். முன் எந்தக்காலத்திலும் இல்லாத அளவு பார்ப்பனர்களும் பிற ஜாதியினருக்கும் இடையில் மாபெரும் அதிகார இடைவெளி உருவாகியது எனலாம்.

காங்கிரஸ் கட்சியிலும் பெருமளவு பார்ப்பனர்களே பங்கெடுத்ததால் இந்த அதிகார அசமத்துவம் குறித்தோ, பார்ப்பனீய சிந்தனைகளை விமர்சிக்க வேண்டியதன் தேவை குறித்தோ சரியான புரிதல் யாருக்கும் ஏற்படவில்லை. இந்தக் குறைபாடு காரணமாக பார்ப்பனீயம், குறிப்பாக மராத்திய பேஷ்வா ஆட்சியின் எச்சமான சல்லி வேர்கள், இந்துத்துவத்தை உருவாக்கியபோது அதை காங்கிரஸால் முழுமையாக எதிர்க்க முடியவில்லை. தொடர்ந்து பின்வாங்கியபடியேதான் போரிட்டது எனலாம். இரண்டு உதாரணங்கள் முக்கியமானவை. 1) இந்தி மொழியை சமஸ்கிருதமயமாக்கி, உருது மொழியை தனி மொழியாக்கியதை காங்கிரஸால் தடுக்க முடியவில்லை. அது இந்து – முஸ்லிம் பிரிவினைக்கும், தேச பிரிவினைக்கும் எந்த அளவு காரணமாக விளங்கியது என்பதை மேலும் ஆராய வேண்டியுள்ளது. ஆலோக் ராய் என்பாரின் ஹிந்தி தேசியம் (Alok Rai, Hindi Nationalism, Orient BlackSwan, 2001) என்ற நூல் இந்த வகையில் கருதற்பாலது. 2) பிற்படுத்தப்பட்டவர்கள் தங்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியதை காங்கிரஸ் ஏற்கத் தயங்கியது. அது இந்திய அரசியலில் பார்ப்பனர்களின் பிடி இறுகுவதை உறுதிப்படுத்தியது. இன்றும்கூட இட ஒதுக்கீடு கொள்கையை நீர்த்துப்போகச் செய்யும் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஆதிக்க ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்க தயங்குவதை காண முடிகிறது.
காந்தி, நேரு இருவருமே பெரும் லட்சியவாதிகளாக இருந்தாலும், அவர்கள் பார்ப்பனீய விமர்சனத்தை முன்னிலைப்படுத்த தவறினர் எனலாம். அதுவே காங்கிரஸின் பெரிய பலவீனமாக அமைந்து, காலப்போக்கில் இந்துத்துவ சக்திகள் வலுப்பெற காரணமானது.

**திராவிடவியம் என்பது என்ன? **
ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் பல்வேறு வார்த்தைகளுடன் ism என்ற பின்னொட்டை சேர்த்துவிடுவார்கள். அதுபோல Dravidianism என்று எழுதுவார்கள். தமிழில் எழுதினால் திராவிடவியம் என்று எழுதலாம். இந்தச் சொல் பயனில் இருந்ததா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால், திராவிட பண்பாடு என்பதை வலியுறுத்தும் அரசியல் கோட்பாட்டை Dravidianism என்று கூறுவதில் தவறில்லை. சமஸ்கிருத மொழி பேசியவர்களை ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஆரியர்கள் என்று அழைத்தார்கள். இவர்கள் மத்திய ஆசியாவின் புல்வெளிகளிலிருந்து கிளம்பி ஒரு சாரார் ஐரோப்பாவுக்கும், மற்றொரு சாரார் கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்கும் வந்ததாகக் கருதப்பட்டது. காரணம், ஐரோப்பிய மொழிகளுக்கும், சமஸ்கிருத மொழிக்கும் காணப்பட்ட ஒற்றுமைகள். முதலில் ஆரியர்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்தவர்கள் பண்படாத ஆதிவாசிகள் என்றே கருதினார்கள். பின்னர் தென்னிந்திய மொழிகள் தனியான மூலங்களைக் கொண்டவை என்பது அறியப்பட்டபோது, எல்லிஸ் முதலிலும், கால்டுவெல் பிற்பாடும் திராவிட மொழிகளும், பண்பாடும் ஆரிய மொழி, பண்பாட்டிலிருந்து வேறுபட்டவை என்பதை நிறுவினார்கள். பின்னர் 1924ஆம் ஆண்டு மொஹஞ்சதாரோ, ஹரப்பா அகழாய்வின் அடிப்படையில் ஜான் மார்ஷல் ஆரியர் வருகைக்கு முன்பே இங்கு நகர நாகரிகம் செழித்திருந்தது என்றார். அந்த சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருக்கலாம் என்ற எண்ணம் உருவானது. சமீபத்தில் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள Journey of Civilization: From Indus to Vaigai என்ற அற்புதமான நூல், ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தால் வெளியிடப்பட்டது, இந்த சாத்தியத்தை விரிவாக சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது.
நால்வர்ண கோட்பாடு என்பது சமஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டதால் அது ஆரிய பண்பாட்டின் அடையாளமாக உள்ளது. உண்மையில் சூத்திரர் என்பதே ஆரியர்கள் அல்லாத மக்களைக் குறிப்பது என்றும் பலர் கூறியுள்ளனர். குறிப்பாக இடைக்காலத்தில் சத்திரியர், வைசியர் போன்ற வர்ணங்கள் கலந்துவிட்டன என்று கூறி மொத்த சமூகமும் பிராமணர், சூத்திரர் என்ற இரண்டு வகையினர்தான் என்ற எண்ணம் பல்வேறு பகுதிகளில் பார்ப்பனர்களால் முன்மொழியப்பட்டதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதனால் பார்ப்பனர்கள் ஆரியர்கள் எனவும், பிறர் திராவிடர் எனவும் கருதவும் இடம் ஏற்பட்டது. ஆனாலும் தென்னிந்திய மொழிகளை பேசுபவர்களுக்கு திராவிட பண்பாடு என்பது தங்கள் வரலாற்று மூலம் எனக் கருதுவது சாத்தியமானது.
இத்தகைய காரணங்களால் திராவிடவியம் என்ற அரசியல் கோட்பாடு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பார்ப்பனீய நால்வர்ண கோட்பாட்டை மறுக்கும் ஓர் அரசியல் தத்துவமாக மலர்ந்தது. இதை வலுப்படுத்தும் விதமாக பல அரசியல் நிகழ்வுகள் நடந்தன. அவற்றில் ஒன்றை உதாரணத்துக்குப் பார்க்க வேண்டும். பார்ப்பனர்கள் பிறருடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்தக் கூடாது என்பது அவர்கள் மூடநம்பிக்கையாக இருந்தது. இனவேற்றுமை நடவடிக்கைகளை போன்றது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வி.வி.எஸ்.ஐயர் என்பவர் ஒரு குருகுலம் தொடங்கினார். இதற்கு காங்கிரஸ் கட்சியும் நன்கொடை அளித்தது. அதில் சேர்ந்த இரு பார்ப்பன மாணவர்களுக்கு தனியாக உணவளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்கள் பெற்றோர்கள் சேர்த்தனர். வி.வி.எஸ்.ஐயரும் ஏற்றுக்கொண்டார்.
இது வெளியே தெரிந்தபோது காங்கிரஸ் கட்சி நிதியுதவி பெற்ற குருகுலத்தில் இப்படியான வேற்றுமை காட்டப்படலாமா என்பது பொதுமன்றத்தில் பெரியதொரு பிரச்சினையாக வெடித்தது. வரதராஜுலு நாயுடு, பெரியார் உள்ளிட்ட பார்ப்பனரல்லாத தலைவர்கள் குருகுல நடவடிக்கையை வன்மையாக கண்டித்தார்கள். ஆனால் தலைவர்கள் பலர் திட்டவட்டமாக கண்டிக்கத் தயங்கினர். ஆய்வாளர் பழ.அதியமான் அவர்கள் இந்தப் பிரச்சினை குறித்த தகவல்களை சிறப்பாகத் திரட்டி நூலாக்கம் செய்துள்ளார் (சேரன்மாதேவி: குருகுல போராட்டமும், திராவிட இயக்கத்தின் எழுச்சியும், 2013) காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. குருகுல பிரச்சினை நடந்தது 1924-1925 ஆண்டுகளில் என்பதை எண்ணும்போது எந்த அளவு பார்ப்பனர்களின் பிற்போக்கு கொள்கைகளை காங்கிரஸ் அனுசரிக்க தலைப்பட்டது என்பதை காண முடியும்.
வரலாற்றுப் போக்கில் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியன கண்ட பெரியாரும், ஆரிய மாயை என்ற சிறந்ததொரு கோட்பாட்டு விளக்க நூலை எழுதிய திராவிட முன்னேற்றக் கழகம் கண்ட அறிஞர் அண்ணாவும், அவர்கள் வழியில் தமிழக வரலாற்றை வடிவமைத்த கலைஞர் அவர்களும் இந்துத்துவம் என்ற கோட்பாட்டுக்கு நேர் எதிர் நிலையில் திராவிடவியம் என்ற கோட்பாட்டை நிறுவியுள்ளனர். அது வலிமையாக வேர்பிடிக்கக் காரணம் இந்துத்துவம் என்பதன் அடித்தளமான பார்ப்பனீயத்தை சமரசமின்றி விமர்சித்ததுதான்.
காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் இந்த உண்மையைப் புரிந்துகொள்வது அவசரமானதும், அவசியமானதுமாகும். இனிமேலும் குடிமை சமூகத்தில் செல்வாக்குடன் விளங்கும் பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்க சக்திகளை அனுசரிக்கும் பொருட்டு பார்ப்பனீய விமர்சனத்தை தவிர்த்தால், இந்துத்துவத்தை எதிர்த்து அரசியல் செய்வதும். உண்மையான பன்மைத்துவத்தை உருவாக்குவதும் மிகவும் கடினமான சவாலாகவே இருக்கும். திராவிடவியமே, அதாவது பிராமண வர்ண அடையாளத்தை விமர்சித்து மறுதலிக்கும் அரசியலே, உண்மையான பன்மைத்துவத்திற்கு வழிவகுக்கும்.
**கட்டுரையாளர் குறிப்பு:**

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: ** [rajankurai@gmail.com](mailto:rajankurai@gmail.com)**
.
