வந்தனா சொனால்கர்
தங்களது மதத்தை எதிர்க்கும் ஆண்கள் வழக்கமாகப் பகுத்தறிவின் மீது நம்பிக்கை வைப்பார்கள். அதுபோகச் சமூக விழுமியங்களைத் துணைக்கு அழைத்து வந்து தங்களுடைய வாதங்களை முன்னிறுத்துவார்கள். அத்தகைய ஆண்களிடமும் பொதுவாகப் பாலினம் குறித்த பிரக்ஞை இருப்பதில்லை. ஆனால், ‘நான் ஏன் இந்துப் பெண்ணல்ல’ என்பதை எழுதும்போது எனக்கு இவை மட்டும் போதுமெனத் தோன்றவில்லை. இந்து மதத்தை நான் சாதிய ஆணாதிக்க அமைப்பாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். இதனைப் பிராமணிய ஆணாதிக்கம் என்றும் சொல்கிறார்கள். இத்தகைய சாதிய ஆணாதிக்கத்துக்குக் குடும்பம்தான் மைய நிறுவனமாக உள்ளது. பெரும்பாலான மதங்களுக்கு ஆணாதிக்கக் குடும்ப அமைப்பே அச்சாணியாக இருக்கிறது என்றாலும் நான் தனிப்பட்ட முறையில் இந்து மதத்தை நிராகரிக்க இந்துக் குடும்பத்திலிருந்தே அதைத் தொடங்க வேண்டுமென நினைக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையில் பல கட்டங்களில் நான் அதை அனுபவிக்கவும் செய்திருக்கிறேன். ஆகவே நான் முன்மொழியும் நிராகரிப்பு என்பது மிகுதியும் தனிப்பட்ட முறையிலானது. பகுத்தறிவின் பெயராலோ, சமூக விழுமியங்களின் அடிப்படையிலோ ஆண்கள் மதத்தை நிராகரிப்பது போன்றதல்ல இது.
மதத்துடனான பெண்ணின் உறவு என்பது பிரதானமாக வீடு, வீட்டுப் பராமரிப்பு, அடுக்களை ஆகியன சார்ந்தது. சாதியடுக்கில் உயர்நிலையில் உள்ள பிரிவினரின் குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்த நான், எனது சாதிக்கு வெளியே மணமுடித்தேன். சாதி ரீதியான அவமதிப்பை வாழ்க்கையில் தாமதமாக அதுவும் மிதமாக எதிர்கொண்டவள். ஆகவே ‘நான் ஏன் இந்துப் பெண்ணல்ல’ என்ற எனது பிரகடனம் சிக்கல் மிகுந்த யதார்த்த நிலையையும் அந்த யதார்த்த நிலையைப் பற்றி என்னுள் படிப்படியாக உருவாகிவரும் புரிதலையும் அடிப்படையாகக் கொண்டது.
மகிழ்ச்சியான இந்துக் குடும்பம் என்ற நம்பிக்கை நமது சமய நூல்களிலும் சில வகையான இலக்கியங்களிலும் வியாபித்திருக்கிறது. முதலாவதாக மனு தர்மம். பெண்களுக்கான கடமைகள் குறித்து பு(இ)கழ் வாய்ந்த விதிகளை விளம்பும் நூல் இது.

மனு முன்னிறுத்தும் மகளிர் கடமைகள்
147. சிறுமியோ, யுவதியோ, மூதாட்டியோ சுதந்திரமாக எதையும் செய்யக் கூடாது. அது அவளது வீடாக இருந்தாலும் சரி.
148. சிறு பிராயத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளம்பருவத்தில் கணவனின் பாதுகாப்பிலும், எஜமான் (கணவன்) இறந்த பிறகு மகனின் பாதுகாப்பிலும் பெண் இருத்தல் வேண்டும். பெண்ணானவள் எப்போதுமே சுதந்திரமாக இருக்கக் கூடாது.
இதற்கு முன்பும் வேறு சில விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
55. பெண்கள் தங்களது தந்தைமார்களால், சகோதரர்களால், கணவர்களால், கொழுந்தனார்களால் கவுரவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட வேண்டும். தான் நன்றாக வாழ விரும்பும் ஆண் இதைத்தான் செய்ய வேண்டும்.
56. பெண்கள் கவுரவிக்கப்படும்போது கடவுளர்கள் அகமகிழ்வார்கள். பெண்கள் மதிக்கப்படாமல்போனால் எந்தப் புனிதச் சடங்கும் பலனளிக்காது.
இந்த விதிகளும் அவற்றைப் பூர்த்தி செய்யவேண்டிய அறிவுரையும் ஆண் குடும்பத் தலைவரை நோக்கிச் சொல்லப்பட்டவை. மனு தர்மம் உண்மையில் ‘உயர் சாதி’ ஆண் குடும்பத் தலைவருக்காக எழுதப்பட்டது. அவர் தன்னைவிடத் தரம் தாழ்ந்தவர்களை (பெண்கள், சூத்திரர்கள், ஆதிசூத்திரர்கள் அல்லது தலித்துகள்) எப்படி விவேகமாக நடத்த வேண்டும், அவருக்கான ஒழுக்க நெறிகள் யாவை என அது வகுத்துள்ளது. பெண்கள் சுதந்திரமாக நடக்க அனுமதி இல்லை. வீட்டு ஆண்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதே அவர்களது விதி.
154. ஒழுக்கமுடைய ஒரு பெண் தன்னுடைய கணவர் நற்பண்புகள் அற்றவராயினும் நற்குணங்கள் இல்லாதவராயினும், பிற பெண்களைச் சிற்றின்பத்துக்கு நாடிச் செல்பவராயினும் கணவரை எப்போதும் தொழ வேண்டும்.
155. கணவனுக்கு அடிபணியும் மனைவி கடவுளுக்கு உயிர்ப்பலி கொடுக்கவோ, நோன்பிருக்கவோ அவசியமில்லை. கணவனுக்கு அடிபணிந்தாலே சொர்க்கத்தில் இடம் நிச்சயம்.
பெண்கள் எதையுமே சுயமாகச் செய்யக் கூடாது என்று கூறிய பிறகும் மனுதர்மம் பெண்ணை மர்மமான பிறவியாகக் கருதுகிறது. மாயாஜால சக்திகள் பெண்ணுக்கு இருக்கக்கூடும் என்றும் கருதுகிறது.
58. பெண்ணைக் கண்ணியமாக நடத்தத் தவறிய வீடுகள் சாபம் விட்டதுபோல அழிந்துபோகும்.
59. எனவே, தான் நலமுடன் வாழ விரும்பும் ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஆபரணங்களும் புத்தாடைகளும் பலகாரங்களும் கொடுத்துக் கவுரவிக்க வேண்டும்.
தங்களது குடும்ப நலனைத் தம்வசம் வைத்திருக்கும் பெண் என்கிற மர்மமான உயிரினத்தை எப்படித் திருப்திப்படுத்த வேண்டும் என்பதையும் மனுஸ்ம்ருதி கூறுகிறது:
பெண்களுக்கு விசேஷ நாட்களில் பரிசுகள் கொடுக்க வேண்டும்.
இந்துச் சமூகத்தில் பெண்கள் நடத்தப்படும் விதத்திலிருந்து மனுதர்மத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். தடுமாற்றமான மனநிலை கொண்டவர்களாகவும், காம வெறி பிடித்தவர்களாகவும், நம்பகத்தன்மையற்றவர்களாகவும் பெண்களைச் சித்தரிக்கும் கதைகள் பல புராணங்களில் உள்ளன. மறுபுறம் 20ஆம் நூற்றாண்டின் நவீன இலக்கியங்கள் பலவற்றில் ஆதர்சமான இந்துக் குடும்பம் என்பது பிராமணக் குடும்பமாகக் காட்டப்பட்டிருக்கிறது. அதில் தன்னுடைய குழந்தைகளுக்காக அத்தனை தியாகங்களையும் செய்பவராகத் தாய் விளங்குவார். குறிப்பாக மகன்களுக்காக. அவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நன்னெறிகளைப் போதிப்பார்.
சூத்திரரும் பெண்களும்
தங்களது வீடுகளில் பெண்கள் கவுரவமாக நடத்தப்பட வேண்டும் என்றுதான் மனுதர்ம சாஸ்திரம் பெண்களைப் பற்றி முதலில் குறிப்பிடுகிறது. பெண் மகிழ்ச்சியாக இருக்கும் வீடுதான் புனிதமானது என்றும் சொல்கிறது. ‘அவரவர் பங்கை எல்லோரும் செய்தலே’ ஆதரிசமான இந்து வீடு என்கிறது. இப்படி ஆணாதிக்கச் சாதிய அமைப்பு அவரவர் ஆற்ற வேண்டிய பங்கை நிர்ணயித்துவிடுகிறது. இதில் பெண்ணின் பங்கைப் புகழ்பாடுதல் என்பது குடும்பம் என்னும் நிறுவனத்தைப் புகழ்பாடுதலுக்கு இணையானதே. இப்படி ஆரம்பிக்கும் மனுதர்ம சாஸ்திரம் பெண்ணைக் கீழ்நிலையில் நடத்துவது தொடர்பான விளக்கங்களைப் பிற்பாதியில் முன்மொழிகிறது. சாதியமைப்பில் உயர் அடுக்கில் இருக்கும் இந்துப் பெண்களும் இதில் விதிவிலக்கு இல்லை. சுயமாக முடிவெடுக்கும் உரிமை உயரடுக்கில் உள்ள சாதிப் பெண்ணுக்கும் இல்லை. பிறருக்குச் சேவகம் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்படும் சூத்திரருக்கு வகுக்கப்பட்ட நியதிதான் உயர் சாதிப் பெண்ணுக்கும் பொருந்தும். பிராமணக் குடும்பத் தலைவன் பெண்ணுக்குப் பொன்னும் பொருளும் வாங்கித் தந்து அவளை மகிழ்வுடன் பராமரிக்க வேண்டும். அமைதி சூழ் இந்து வீடென்பது இதுதான். அத்தகைய வீட்டில் உள்ள பூஜை அறையின் மூலை முடுக்கில் இறைவனுக்குச் சாத்திய மலர்கள் உதிர்ந்து கிடக்கும். அவை உலர்ந்து கிடந்தாலும் குப்பையாகக் கருதப்பட மாட்டாது. அவை நிர்மால்யம் (தூய்மையானது). ஒருபோதும் தீட்டாகாது. அதேபோன்று வீட்டின் பூஜை அறையில் ஏற்றிவைக்கப்படும் ஊதுபத்தி காற்றில் பரப்பும் மணத்துக்கும் சாதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவே மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறது. ஊதுபத்தியின் புகை சூழ்ந்த பூஜை அறையின் காட்சி நமது தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் திரும்பத் திரும்பக் காட்டப்படுகிறது. இதற்கான பின்புலம் எப்போதும் வசதி படைத்த உயர் வர்க்கத்து வீடுதான்.
இத்தகைய காட்சி வடிவங்கள் ஒருவிதமான மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. மாலைக்கருக்கலில் விளக்கேற்றுதல் பெண்ணின் கடமை என்பதாக மராத்தி இலக்கியமும் பண்பாடும் விதந்தோதி வந்திருக்கிறது. முன்பெல்லாம் கிராமப்புறத்தில், வீட்டுக்கு வெளியே விளக்கேற்றுவது என்பது ‘இருட்டைப் போக்கும் வெளிச்சம்’ எனப் பயன்பாட்டுக்கானதாகக் கருதப்பட்டது. அதேநேரம் தீய சக்திகளை விரட்டியடிப்பதாகப் பின்பற்றும் மூடநம்பிக்கையும் இருக்கவே செய்தது. ஆனால், இன்றைய நகர்ப்புற வீடுகளில் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட கடவுளர்கள் சிலைகளுக்கு முன்பாக வீட்டுக்குள் விளக்கு ஏற்றிவைக்கப்படுகிறது. விளக்கேற்றும் பெண்ணின் கை அல்லது மகளை விளக்கேற்றச் சொல்லும் தாயின் குரல் இந்துப் பெண்ணுக்கான கடமையைச் சுட்டிக்காட்டும் வலுவான குறியீடாகவே மாறியிருக்கிறது. இல்லத்தைப் பாதுகாப்பாக மகிழ்ச்சியுடன் வைத்திருந்து காக்கும் கடமை பெண்ணுக்கு இருப்பதையே அது சுட்டுகிறது. மகாராஷ்டிர இல்லங்களில் மாலை வேளைகளில் ‘சுபம் கரோத்தி’ என்னும் சுலோகம் உச்சரிக்கப்படுவது வழக்கம். குடும்பத்தினருக்கு நலம், ஆரோக்கியம் உள்ளிட்ட அத்தனை மங்கலகரமான விஷயங்களும் கிடைக்க வேண்டி பாடப்படுவது இது. “தீவா லாவ்லதுளசிபஷி உஜேதபத்லா விஷ்ணுபஷி ” என்று அது நிறைவடைகிறது.
வீட்டுக்கு வெளியே தோட்டத்தில் உள்ள துளசி மாடத்தில் இப்படி விளக்கேற்றும் வழக்கமும் உள்ளது. பெண் தெய்வமான துளசியைக் குறிக்கும் செயலாக இது இருந்தாலும் அங்கு வணங்கப்படுவது என்னவோ துளசியின் கணவரான விஷ்ணுதான். அதேபோன்று ஆண் தெய்வமான விஷ்ணுவுக்குத்தான் பெண்ணின் கை தீபமேற்றுகிறதே தவிர பெண் தெய்வமான துளசிக்கல்ல. ஆக மொத்தம், அத்தனை பக்திக் காரியங்களும் ஆணாகப்பட்ட குடும்பத் தலைவரைப் பாதுகாப்பதற்கானவையே. இதன்வழி ஆண்மையச் சமூக அமைப்பு கட்டுக்குலையாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாகப் பிராமணக் குடும்பத்திலிருந்து வந்த பெண்ணியவாதி ஒருவருடன் கலந்துரையாடினேன். அப்போது அவர், இந்தச் சுலோகத்தின் பிற்பாதி இன்னும் மோசம் என்றார். குடும்பத் தலைவர் நலமுடன் உயிர் வாழ்தலே போதும். அதுவே ஒட்டுமொத்தக் குடும்பத்தினரின் நலனுக்கு இணையானது என அதில் துதிபாடப்படுவதை விளக்கினார்.
••

நான் ஏன் இந்துவல்ல என்பதை எழுதிக்கொண்டிருக்கும் நான், உயர் சாதி இந்துப் பெண்ணாகச் சாதியத்தின் கோர முகத்தையோ ஆணாதிக்கத்தின் துர்நாற்றத்தையோ சிறு வயதில் நேரடியாக அனுபவித்ததில்லை. ஆனால், நான் அனுபவித்த உணர்வுப் போராட்டம் ஆணாதிக்கக் குடும்ப அமைப்பினால் விளைந்தது. அதனால்தான் என்னுடைய பெற்றோரின் திருமணம் முறிந்தது. சில சம்பவங்களின் சாதியப் பின்னணி எனக்குப் பிறகுதான் புலப்பட்டது. கறுப்பு- வெள்ளையாக நான் இந்து மதத்தை நிராகரிக்கவில்லை. என் வாழ்வின் தொடக்கக் கட்டத்தில் எனக்கு ஏற்பட்ட தாக்கங்களை இங்கே நான் அரசியல் நோக்குடன் தான் எழுதுகிறேன். தலித் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அவமானங்களும் துயரங்களும் உச்சபட்சமானவை என்பதால் பொதுவாகச் சாதி குறித்த சுயசரிதையை, தலித்துகளிடமிருந்து மட்டுமே எதிர்பார்க்கிறோம். உயர் சாதி எழுத்துகள் அவ்வளவாக வெளிப்படையாக இருப்பதில்லை. ‘பிராமணராக இருப்பதில் பெருமிதம்’ கொள்ளும் உணர்வே அதில் மேலோங்கியிருக்கும். தங்களுக்குக் கிடைத்திருக்கும் சலுகைகள் அவர்களது கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஆகையால் உயர் சாதிப் பெண்ணியவாதிகள் ஆண்களின் மூர்க்கத்தனமான செயல்கள் குறித்து எழுதுவார்கள். ஆணாதிக்கக் குடும்ப அமைப்புக்குள் நிலவும் ஏற்றத்தாழ்வைச் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால், அவர்கள் தங்களது சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் ஆற்றும் எதிர்வினை குறித்து அவ்வளவாகப் பேசுவதில்லை. ஒற்றுமை குலைந்த என்னுடைய ஆணாதிக்கக் குடும்பத்தைப் பற்றிய என்னுடைய எழுத்து கண்டனமாகவோ, தற்காப்பாகவோ இருக்காது. பலவித மாறுபாடுகளோடு, தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும் ஆற்றலோடு சமத்துவமின்மையின் மீது இந்து ஆணாதிக்க அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே என் எழுத்தின் நோக்கம். அதிலும் உடல்ரீதியான குறிப்பிட்ட சில செயல்பாடுகளையும், சமூகரீதியான குறிப்பிட்ட சில நடவடிக்கைகளையும், குறிப்பிட்ட சில சக மனிதர்களையும்கூடத் தூய்மையற்றவர்களாகவும் தீட்டாகவும் அணுகும் முறையைப் பற்றியும் வாசகர்கள் சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
••

(காலச்சுவடு பதிப்பகத்தின் புதிய வெளியீடான ‘நான் ஏன் இந்துப் பெண் அல்ல’ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி இந்தக் கட்டுரை. நூலாசிரியர் வந்தனா சொனால்கர். ஆங்கிலம் வழித் தமிழில்: ம. சுசித்ரா. நூலின் விலை ரூ.200, பக்கம் 168.)

Comments are closed.