ADVERTISEMENT

’தர்கா’வுக்கு குறி- மதுரையில் மதக்கலவரத்தை உருவாக்க ’இந்துத்துவா’ சதி: சீமான்

Published On:

| By Mathi

Seeman Thirupparankundram

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீமான் வெளியிட்ட அறிக்கை:
திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுநாள்வரை பின்பற்றாத ஒரு நடைமுறையைச் சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற பிரிவினைகளுக்கே வழிவகுக்கும்.

ADVERTISEMENT

ராமஜென்ம பூமிக்கு நேர்ந்த கதி

இராமஜென்ம பூமியை வழிபடத்தான் போகிறோமென உச்ச நீதிமன்றத்தில் கூறிய இதே மதவாத கும்பல், பாபர் மசூதியை அயோத்தியில் என்ன செய்தது என்பதை நாடறியும். அதுபோல, மதுரை மண்ணை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணைநிற்பது வெட்கக்கேடானதாகும். சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படும் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல.

ADVERTISEMENT

மதுரை மண்ணில் மதமோதல்

மதம் கடந்த ஒற்றுமையைப் போற்றிக் காத்து வரும் மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதமோதலை உருவாக்குவதற்காகக் குறிவைத்து நடத்தப்படும் இந்துத்துவ அமைப்புகளின் மதவாத அரசியல் செயல்பாடுகள் யாவும் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட வேண்டியதாகும்.

ADVERTISEMENT

சமய மோதலே இல்லையே

முப்பாட்டன் முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் சிவன் கோயிலும், மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை. ‘உன் மதம் சிறந்ததென்றால் வழிபடு! என் மதமும் சிறந்ததது; வழிவிடு’ எனும் மதநல்லிணக்கக் கோட்பாட்டைப் பின்பற்றி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகச் சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் மதுரை மண்ணின் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சிக்கந்தர் தர்காவுக்கு குறி

திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் சிக்கந்தர் தர்காவைக் குறிவைத்து, ‘சிக்கந்தர் மலை’ எனப் புதிய பெயரைப் புனைந்து, இசுலாமியர்கள் மலையை ஆக்கிரமிக்க முயல்வதாக அவதூறைப் பரப்பி, மதவுணர்வுகளைத் தூண்டக்கூடிய வேலையை இந்துத்துவ அமைப்புகள் செய்வது மிக ஆபத்தான அரசியலாகும். சிக்கந்தர் மலை என எந்த இசுலாமிய இயக்கமும் கூறாத சொல்லாடலை வலியத் திணித்து, திருப்பரங்குன்றம் மலைக்காகப் போராடுவதாகக் கூறும் பெருமக்களே! ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள மலைகள் எல்லாம் வேட்டையாடப்பட்டு, கனிமவளங்களாக அண்டை மாநிலங்களுக்கு அள்ளிச் செல்லப்படும்போது எங்கே போனீர்கள்? அப்போதெல்லாம் முருகன் மீதான உங்கள் இறைப்பற்று எங்கே போனது? தமிழ் வழிவந்த முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பல நூறு கோயில்களில் குடமுழுக்கும், வழிபாடும் செய்யக்கூட வழியற்ற நிலை தாய்த்தமிழ்நாட்டில் இருக்கிறதே? அதற்கெதிராக ஒருநாளும் நீங்கள் வீதிக்கு வந்து போராடியதில்லையே ஏன்? வாக்குவேட்டைக்காக சமூக அமைதியைக் கெடுக்க முயல்வதுதான் உங்களது ஆன்மீகப்பற்றா? வழிபாட்டுணர்வா? பேரவலம்!

திமுக அரசு மீது புகார்

சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் முறை இசுலாமியச் சொந்தங்களிடையே பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதனைச் சிக்கலாக்கி, அரசியல் ஆதாயம் தேட முற்படும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளை உரிய நேரத்தில் கட்டுப்படுத்தத்தவறிய திமுக அரசு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடச் சென்ற அபுதாஹீரைத் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்த காவலர்கள் மீது துறைசார்ந்து நடவடிக்கை எடுத்து, அங்கு பல ஆண்டுகளாக ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்யும் முறை இருக்கிறதென்பதை அரசுத்தரப்பு மக்களுக்கு எடுத்துரைத்திருந்தால் மதவெறியர்களின் அரசியல் சூழ்ச்சிகள் நடந்தேறியிருக்குமா? தும்பை விட்டுவிட்டு இப்போது வாலைப் பிடிக்கிற வேலையைச் செய்கிறது ஆளும் திமுக அரசு. ‘இந்துக்களின் விரோதி’ என மதவாதிகள் செய்யும் அரசியல் பரப்புரைக்குப் பயந்து, சமரசம் செய்துகொள்ளும் திமுக அரசின் கையாலாகாத்தனமே இந்தளவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
நாடு விடுதலை பெற்ற நாளில் எந்த நிலையில் வழிபாட்டுத்தலங்களும், அதன் தன்மையும் இருந்ததோ அதே நிலையே தொடர வேண்டுமென்கிறது 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டம். அச்சட்டத்தின்படி, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே இருந்த வழிபாட்டு முறைகளும், நடைமுறைகளுமே தொடருவதே சரியானதாக இருக்கும். அந்த வகையில், காலங்காலமாக தீபமேற்றும் இடத்தைவிடுத்து, தர்காவுக்கு அருகில் புதிய இடத்தில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற ஒன்றாகும். பொதுமக்கள் தங்களது மனஅமைதிக்காகவும், மெய்யியல் நம்பிக்கைக்காகவும் வழிபடும் வழிபாட்டுத்தலங்களையே பதற்றத்துக்குரிய இடமாக மாற்றுவது இழிவான அரசியலாகும்.

பிரித்தாளும் சூழ்ச்சி

‘நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமன்றம் எனும் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டால், அரசியலமைப்புச்சட்டம் தோல்வி அடைந்ததாகப் பொருள் என்கிறார்’ அண்ணல் அம்பேத்கர். அத்தகைய நிலையில், தற்காலச்சூழல் மாறியிருப்பது கெடுவாய்ப்பானதாகும். மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்துச் சமத்துவத்தை நிலைநாட்ட மண்ணின் மக்கள் தமிழர் எனும் இன உணர்வோடு திரள்வதே ஓர்மைக்கான ஒற்றைப் பெருவாய்ப்பாகும்.

மத பிளவுகளை முறியடிப்போம்

திருப்பரங்குன்றம் மலையை வைத்து மதுரையில் மதமோதலை உருவாக்கி, மக்களைப் பிளவுபடுத்த முற்படும் சதிச்செயல்களை சாதி, மதம் கடந்து மொழியால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற இன அடையாளத்தோடு ஒற்றுமை உணர்வுடன் ஓரணியில் நின்று முறியடிப்போம்! இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share