திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி… மோடிக்கு தமிழ் மீது பற்று  – ஈபிஎஸ்  

By Kavi

|

Published on 4 Mar 2026, 3:54 PM

திருச்சி ரயில்வே அலுவலகத்தின்  நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “ கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

“ கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் “ கடமையின் நுழைவுவாயில்” என்று பொருள். 

இந்நிலையில் மத்திய பாஜக அரசு தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

ADVERTISEMENT

இந்தநிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்   அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், 

 “புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்த்தவ்ய துவார்” என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது.

இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் “திருவள்ளுவர் இருக்கை” அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது.

இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும்.

எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel