• கே. அசோக் வர்தன் ஷெட்டி, IAS (ஓய்வு),
இந்திய மொழிக் கொள்கை குறித்த புதிய சிந்தனை
மொழி இந்தியாவின் கூட்டாட்சிக்கு தொடர்ச்சியானதும் மிகவும் கடினமானதுமான சவால்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்தச் சவால் அரசமைப்பு சபையைப் பிளவுபடுத்தியது; 1960களில் கடுமையான இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் தூண்டியது; மேலும் இன்றளவிலும் எதிர்ப்பு உணர்ச்சிகளைத் தூண்டி வருகிறது. இதனையே தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 அறிக்கையின் மும்மொழிக் கொள்கையைத் நிரகாரித்துவிட்டதன் மூலம் எடுத்துக்காட்டுகிறது. தீர்வு காணப்பாடாமல், நமது நாடுதழுவிய உரையாடலில் புகைந்துகொண்டு இருக்கும் விசயமாக மொழிச்சிக்கல் இன்றும் உள்ளது.
மொழிச்சிக்கல் அனல்தெறிக்கும் சர்ச்சைகளைக் கிளப்பினாலும், மொழி இந்தியாவின் மிகப்பெரிய வலிமைகளுள் ஒன்று. தமக்கே உரிய தனித்துவமான வரலாறு, இலக்கியம், உலகக் கண்ணோட்டம் ஆகியவற்றின் களஞ்சியமாகத் திகழும், பத்து பன்னிரண்டு பழமையான மொழிகளும் ஆயிரக்கணக்கான தாய்மொழிகளும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து செழித்து வளர்ந்து, வளம் பெற்றது நமது நாகரிகம். பலர் பன்மொழிச் சூழலைத் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல் என்று தவறாகக் கருதுகின்றனர். உண்மை இதற்கு மாறானது… இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மை அறிவார்ந்த வகையில் பேணப்பட வேண்டிய முக்கிய வளம் ஆகும்; வரும் தலைமுறைகளுக்குப் பாதுகாத்து அளிக்கப்பட வேண்டிய விலைமதிப்பற்ற மரபுச்செல்வம் ஆகும்.
மொழிச்சிக்கல் தொடர்ந்து முக்கியமானதாக இருந்தபோதிலும், அது குறித்து முழுமையானதும் ஒருதலைசார்பற்ற வகையிலும் மீளாய்வு நடைபெறுவது அரிதாக உள்ளது. இந்தக் கட்டுரை நான்கு கருப்பொருள்களின் அடிப்படையில் நீண்டகாலமாக உள்ள மொழிச்சிக்கல் குறித்த விவாதத்தை மீண்டும் ஆராய முயல்கிறது…
1. இந்தியாவினுடைய மொழிச் சூழல் எவ்வாறு உள்ளது?
2. நாட்டின் ஒற்றுமைக்கு உண்மையில் ஒற்றைத் தேசிய மொழி ஒன்று தேவையா?
3. மும்மொழிக் கொள்கையின் நோக்கங்கள் வெற்றிபெற ஏன் தவறிவிட்டன?
4. அரசமைப்புச் சட்டம் மொழிச்சிக்கலை எவ்வாறு கையாள்கிறது? இப்போது என்ன சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன?
இந்த மொழிச்சிக்கல் என்பது வெறும் மொழி குறித்தது மட்டுமல்ல; சமத்துவக் கொள்கை, கூட்டாட்சி சமநிலை, பண்பாட்டுச் சுதந்திரம் ஆகிய அடிப்படை மக்களாட்சிக் கொள்கைகளைக் குறித்தது ஆகும்.
இந்தியாவினுடைய மொழிச் சூழல் காட்சி

இந்தியாவில் எத்தனை மொழிகள் உள்ளன? இதற்குப் பதில் “மொழி” குறித்த நமது வரையறையைச் சார்ந்துள்ளது. மொழியின் தனித்துவமான ஒலி அமைப்பு (ஒலியியல்), சொல் உருவாக்க முறைகள் (சொல்லியல்), தொடர் அமைப்பு (தொடரியல்) அல்லது சொற்களஞ்சியத் தொகுதி (அகராதியியல்) மூலம் மொழியை வரையறுக்கின்றோமா? தனித்துவமான எழுத்து வரிவடிவம், முழுவதும் ஒத்துபோகாத இயல்பு அல்லது வெறுமனே நிர்வாக வசதி ஆகியவற்றால் மொழி வரையறையைத் தீர்மானிக்கப்படுகின்றதா?
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சனின், புகழ்பெற்ற இந்திய மொழியியல் ஆய்வு (Linguistic Survey of India) 179 மொழிகளையும் 544 பேச்சுவழக்குகளையும் பட்டியலிட்டது. இன்று உலகளாவிய மதிப்புமிகு தரவுத்தளமான எத்னோலாக் (Ethnologue) இந்தியாவில் 424 பூர்வீக மொழிகளையும் 30 பூர்வீகமற்ற மொழிகளையும் உள்ளடக்கி 454 வழக்கத்தில் உள்ள மொழிகளை பட்டியல் இடுகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற மொழியியலாளர் பேராசிரியர் ஜி.என். தேவி வழிநடத்திய இந்திய மக்கள் மொழியியல் ஆய்வு (People’s Linguistic Survey of India, 2010–12), 780 மொழிகளைக் கண்டறிந்து உள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 19,569 தாய்மொழிகள் உள்ளன என்று தோராயமாகப் பதிவு செய்யப்பட்டது. அவற்றில் 18,200 “மற்றவை” என்ற பிரிவில் அதிகாரத்துவச் சூழ்ச்சியால் இணைக்கப்பட்டன என்றும், மீதமுள்ள 1,369 மொழிகள் பின்னர் 121 “மொழிகளாக” சுருக்கப்பட்டன என்றும் பேராசிரியர் ஜி.என். தேவி “இந்தியா: ஒரு மொழியியல் நாகரிகம்” (India: A Linguistic Civilisation) என்ற தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். நிர்வாக வசதிக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த எண்ணிக்கைக் குறைப்பு இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையின் உண்மையான அளவை மறைத்துவிட்டது.
“இந்திப் பெரும்பான்மை” என்கிற மாயை

44 சதவீத இந்தியர்கள் இந்தி பேசுகிறார்கள் என்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்டது. ஆனால், 53 தனி மொழிகளை “இந்தியின் பேச்சுவழக்குகள்” என்று தவறாக வகைப்படுத்துவதன் மூலமே, இந்தி பேசுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என பேராசிரியர் ஜி.என். தேவி எடுத்துக்காட்டியுள்ளார் (மேற்குறிப்பிட்ட நூல்). இவற்றில் போஜ்புரி, ராஜஸ்தானி, மகதி, அவதி, புண்டேலி, சத்தீஸ்கரி, ஹரியான்வி ஆகியவை அடங்கும். இம்மொழிகள் அனைத்தும் இந்திக்குப் பல நூற்றாண்டுகள் முன்பே வளமான இலக்கிய மரபுகளைக் கொண்ட தனித்துவமான மொழிகள். அவற்றை “இந்தியின் பேச்சுவழக்குகள்” என்று அழைப்பது நியாயமற்றது. எவ்வாறெனில், லத்தீன் மொழியை “இத்தாலிய மொழியின் பேச்சுவழக்கு” என்று அழைப்பது போல நியாயமற்றது ஆகும்.
இம்மொழிகளில் குறைந்தது 25 மொழிகளைப் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் தாய்மொழியாக பேசுவோர் உள்ளனர். மேலும் பஞ்சரி போன்ற சில மொழிகள் கொஞ்சம்கூட இந்தியுடன் ஒத்த தன்மை இல்லாதவை. இவற்றையெல்லாம் கணக்கில்கொண்டு பார்த்தால், இந்தியாவின் மக்கள் தொகையில் உண்மையாக இந்தி பேசுவோர் 25 சதவீதத்தினர் மட்டுமே ஆகும். ஆகவே, இந்திய மொழிகள் அனைத்துமே சிறுபான்மை மொழிகள், வட்டார மொழிகள் ஆகும். இதற்கு இந்தி மொழி மட்டும் விதிவிலக்கானது அல்ல. இந்தி மொழி துடிப்பானதும் மதிப்புமிக்கதுமாக இருந்தாலும்கூட, சிறப்பு முன்னுரிமை அளிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை.
வட்டாரத்திற்குள் நிலைத்து வாழும் சமூகம்
63 சதவீத இந்தியர்கள் தங்கள் பிறந்த இடத்தை விட்டு வெளியேறியதில்லை; 85 சதவீத இந்தியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு வெளியேயும், 95 சதவீத இந்தியர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு வெளியேயும் குடியேறவில்லை என்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது. கல்வி, வேலை, அரசியல், நிர்வாகம், வணிகம், பண்பாடு போன்ற துறைகளில் அன்றாட வாழ்க்கை பெரும்பாலும் வட்டார மொழிகளிலேயே நடக்கிறது.
மாநிலங்களுக்கு இடையேயான இடம்பெயர்வு, பொருளாதார வாய்ப்புகள் குவிந்துள்ள இடங்களை நோக்கி, பெரும்பாலும் இந்தி வட்டாரத்திலிருந்து தெற்கு, மேற்கு, டெல்லி ஆகிய பகுதிகளை நோக்கி நிகழ்கிறது. இந்தச் சூழ்நிலையில், இந்தியை இந்தியாவின் ‘இயற்கை’யான தொடர்பு மொழி என்று முன்னிறுத்துவது மக்கள்தொகையியல் சார்ந்த புனைவு ஆகும்.
அரசமைப்பின் எட்டாவது அட்டவணை

இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையைப் போற்றும் வகையில் அரசமைப்பின் எட்டாவது அட்டவணை உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த அட்டவணை காலப்போக்கில் தெரிந்தெடுத்த வகையில் ஏற்பு அளிப்பதற்கான அரசியல் கருவியாக மாறியுள்ளது. இது 22 மொழிகளை மட்டுமே பட்டியலிட்டு உள்ளது. அவற்றில்:
- அசாமி, வங்காளி, டோக்ரி, குஜராத்தி, இந்தி, காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, உருது ஆகிய 15 மொழிகள் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
- கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய 4 மொழிகள் திராவிட மொழிக் குடும்பம்.
- சந்தாலி என்கிற ஒரு மொழி ஆஸ்ட்ரோ-ஆசியடிக் மொழிக் குடும்பம்.
- போடோ, மணிப்பூரி ஆகிய 2 மொழிகளும் திபெத்திய – பர்மிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை.
இந்த அட்டவணை தெற்கின் செம்மொழி மரபுகளையும், மத்திய – கிழக்கு – வடகிழக்கு இந்தியாவின் வளமான பழங்குடி மொழிகளையும் முழுமையாகக் கணக்கில் கொள்ளவில்லை. ஆங்கிலம் வெளிப்படையாக விலக்கப்பட்டுள்ளது.
அட்டவணையில் உள்ள முரண்பாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. 25,000க்கும் குறைவானவர்கள் பேசும் சமஸ்கிருத மொழிக்கு தொன்மைக்காக ஏற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பௌத்த – ஜைன திருமுறை நூல்கள் இயற்றப்பட்டுள்ள தொல்சீர் செம்மொழிகளான பாளியும் பிராகிருதமும் அட்டவணையில் இடம்பெறவில்லை. சிந்தி (28 இலட்சம்), டோக்ரி (26 இலட்சம்), கொங்கனி (23 இலட்சம்) ஆகிய மொழிகள் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் பிலி (104 இலட்சம், அதாவது 1 கோடியே 4 இலட்சம்), கோர்தா (35 இலட்சம்), கோண்டி (28 இலட்சம்) ஆகிய மொழிகள் அட்டவணையில் சேர்க்கப்படவில்லை. மக்கள்தொகை வலிமை, இலக்கியச் செல்வம் அல்லது பண்பாட்டுப் பங்களிப்பு ஆகியவற்றை விட அரசியல் செல்வாக்கே அட்டவணையில் சேர்ப்பதைத் தீர்மானிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
எட்டாவது அட்டவணையிலிருந்து விலக்கப்படுவது உறுதியான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. அட்டவணைக்கு வெளியே உள்ள மொழி அரசின் ஆதரவு, கல்வித்துறை ஆதரவு, பொது ஊடக ஆதரவு ஆகியவற்றுக்கான அணுகலை இழக்கிறது. இதன் விளைவாக அந்த மொழி அலுவல்பூர்வமாக இல்லாத ஒன்றாகிவிடுகின்றது.

யுனெஸ்கோ பிரகடனப்படுத்தியுள்ள குழந்தையின் தாய்மொழியில் தொடக்கக் கல்வியை வழங்க வேண்டும் என்ற கொள்கையைச் செயல்படுத்த அரசமைப்பின் உறுப்பு 350A மாநிலங்களுக்குக் கட்டளையிடுகிறது; தேசிய கல்விக் கொள்கை 2020 அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆயினும், நடைமுறையில் பெரும்பாலான பள்ளிகள் முக்கியமான மாநில மொழியை – ஏறக்குறைய அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழியை – அல்லது ஆங்கில மொழியைப் பயிற்றுமொழியாகப் பயன்படுத்துகின்றன. அட்டவணையில் சேர்க்கப்படாத மொழிகள் அரிதாகவே கற்பிக்கப்படுகின்றன. அவை ஒருபோதும் பயிற்றுமொழியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் அம்மொழிகளுக்கு ஆசிரியர்கள், பாடப்புத்தகங்கள், கற்பித்தல் பொருட்கள் இல்லாமலும் உள்ளன. இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான அட்டவணையில் சேர்க்கப்படாத மொழிகள் மெதுவாக அழிவை நோக்கிச் செல்கின்றன.
அழியும் மொழிகள்: நாடு தழுவிய அவசரநிலை
கடந்த ஐம்பது ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 இந்திய மொழிகள் மறைந்துவிட்டன என்றும், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் 400க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன என்றும் இந்திய மக்கள் மொழியியல் ஆய்வு (The People’s Linguistic Survey of India) எச்சரிக்கிறது. மொழி ஒன்று அழியும் போது, வெறும் சொற்கள் மட்டும் அழிவதில்லை; மரபுத்தொடர்கள், தொன்மங்கள், செடிகொடிகள் குறித்த அறிவு, மருத்துவ மரபுகள், பண்பாட்டு நினைவு ஆகியவற்றை உட்கொண்டிருக்கும் உலகக் கண்ணோட்டமும் அழிந்து போகிறது. ஒவ்வொரு மொழியும் அழியும்போது, இந்திய ஆன்மாவின் ஒருபகுதியும் இறந்துபோய் விடுகிறது.
பின்லாந்து மொழியியலாளர் டோவ் ஸ்குட்னாப்-கங்காஸ் “மொழியும் மொழிக் கல்வியின் எதிர்காலமும்” (On the Future of Language and Language Education) என்கிற தனது நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்:
“மொழிகள் இயற்கையாகவே இறந்துபோய் விடுவதில்லை; அவை கொல்லப்படுகின்றன. மொழிக் கல்விக் கொள்கைகள் பெரும்பாலும் மொழி ஒன்றின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்ததன் விளைவாகவே, சிறுபான்மை மொழிகள் அழிந்துபோகின்றன. இது தற்செயலானது அல்ல. அதிகாரம் மிக்கவர்கள் அழிவை விளைவிக்கும் முடிவுகளை மேற்கொள்வதன் விளைவு ஆகும்.”
மொழி நீதியை நோக்கி

பின்வரும் இரண்டு நடைமுறைச் சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
- மக்கள்தொகை கணக்கெடுப்புக் குறைபாடுகளைச் சரிசெய்தல்: மக்கள் தொகை கணக்கெடுப்பு 53 தனி மொழிகளை “இந்தியின் பேச்சுவழக்குகள்” என்று தவறாக வகைப்படுத்துவதை நிறுத்தி, இந்தி பேசுபவர்களின் உண்மையான எண்ணிக்கையை முன்வைக்க வேண்டும். போஜ்புரி, ராஜஸ்தானி, மகதி, அவதி முதலான மொழிகளைத் தனித்துவமான மொழிகளாக அங்கீகரிப்பது, மெய்யான விகிதத்தில் இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதும், இந்திப் பெரும்பான்மை என்கிற மாயையை அகற்றுவதும் ஆகும்.
- எட்டாவது அட்டவணையை விரிவுபடுத்துதல்: பத்து இலடசத்திற்கும் அதிகமானோர் தாய்மொழியாகப் பேசும் அனைத்து மொழிகளும் இயல்பாகவே எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும். இதனால் பிலி, கோண்டி, குருக், கண்டேஷி, துளு, காசி, ஹோ, காரோ, முண்டாரி ஆகிய ஒன்பது மொழிகளும், இப்போது “இந்தியின் பேச்சுவழக்குகள்” என்று தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ள 25 மொழிகளும் அட்டவணையில் சேர்க்கப்படும். ஆஸ்ட்ரோ-ஆசியாடிக், திபெத்திய-பர்மன் மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடி மொழிகளுக்கு, தாய்மொழியாகப் பேசுவோர் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிற குறைந்த வரம்பு அமைக்கப்படலாம். சமஸ்கிருத மொழியோடு பாளியும் பிராகிருதமும் தொல்சீர் செம்மொழிகள் என்கிற அங்கீகாரத்தைப் பெற வேண்டும். வாழ்க்கைப் போக்கைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, ஆங்கிலமும் அட்டவணையில் இணைக்கப்பட வேண்டும்.
ஒரே நாடு, ஒரே மொழி?

நூற்றைம்பது கோடி மக்களை ஒரே மொழி ஒன்றிணைக்க முடியும் என்ற கருத்து வரலாற்று அடிப்படையோ அல்லது அனுபவ அடிப்படையோ இல்லாத அகநிலை விருப்பம் ஆகும். குடிமக்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசுவதால் அல்ல, மாறாக குடிமக்கள் அனைவரும் தமது சொந்த மொழியைப் பேச சுதந்திரம் இருப்பதால் மட்டுமே நாடுகளில் ஒற்றுமை பேணப்படுகின்றது. ஒற்றைப்படையான மொழிப் பயன்பாட்டில் அல்லாமல், மொழிச் சமத்துவத்தில், தம் தாய்மொழி காரணமாக எந்தச் சமூகமும் இரண்டாம்தரக் குடிமக்களாக உணரக்கூடாது என்கிற உறுதிப்பாட்டில் உண்மையான ஒற்றுமை பிறக்கிறது. பொதுமொழி ஒற்றுமையை உருவாக்காது; ஒற்றை மொழியைத் திணிப்பது ஒற்றுமையின்மைக்கு உறுதியாக வழிவகுக்கும் என்கிற உண்மையை அனைத்து வரலாற்றுப் படிப்பினைகளும் சுட்டிக்காட்டுகின்றன.
உலகம் அளிக்கும் படிப்பினைகள்
நாட்டு ஒற்றுமைக்கு ஒற்றை மொழி அவசியம் என்ற நம்பிக்கை 19ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் கண்டுபிடித்தது ஆகும். ஜெர்மனி, இத்தாலி முதலான புதிதாக தோன்றிய தேச-அரசுகள் ஒற்றை அடையாளத்தை உருவாக்க ஒரே மொழியைத் திணித்தன. சிறிய ஒரேமாதிரியான நாடுகளுக்கு ஏற்ற அந்த அணுகுமுறை, இந்தியா போன்ற துணைக்கண்ட நாகரிகத்திற்குப் பொருந்தாது. இது மழைக்காடு ஒன்றைத் தட்டையாக்கி, யூகலிப்டஸ் மரத் தோட்டமாகக் கருதுவது போன்றது ஆகும்.
ஒன்றிணைப்பு அல்ல, இணங்கிப் போதலே ஒற்றுமையை நிலைநிறுத்துகிறது என்கிற படிப்பினையை நவீன மக்களாட்சிகள் வழங்குகின்றன. ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலி, ரோமன்ஷ் ஆகிய நான்கு ஆட்சி மொழிகளுடன் சுவிட்சர்லாந்து செழித்து வளர்கிறது. கனடாவில் ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய இரண்டும் ஆட்சி மொழிகளாக உள்ளன. 12 ஆட்சி மொழிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் பிரிவினைகள் நிலவிய கடந்த காலத்தை தென்னாப்பிரிக்கா மாற்ற முயல்கிறது. கவனமாக வடிவமைக்கப்பட்ட கூட்டாட்சி உடன்பாட்டின் மூலம் டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளை பெல்ஜியம் சமமாகப் பேணுகிறது. 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம்கூட 24 ஆட்சி மொழிகளில் அலுவல்களை மேற்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே ஆட்சி மொழியாக ஜெர்மன் அல்லது பிரெஞ்சு மொழியைத் திணிப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அந்த ஒன்றியம் எவ்வளவு காலம் நீடிக்கும்?
நமக்கு அருகில் உள்ள சிங்கப்பூர் நல்ல படிப்பினை தரும் முன்மாதிரியாக உள்ளது. அந்நாடு, 1965ல் சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 74 சதவீதமாக இருந்த சீனப் பெரும்பான்மையினர், மாண்டரின் மொழியை மட்டுமே நாட்டின் ஒற்றை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கொடுத்த தீவிர அழுத்தத்தை எவ்வாறு எதிர்த்தார் என்பதை சிங்கப்பூரின் முதல் பிரதமர், லீ குவான் யூ “From Third World to First” என்கிற நூலில் நினைவுகூர்ந்து உள்ளார். அத்தகைய நடவடிக்கை மலாய்க்காரர்கள் (13.5 சதவீதம்), தமிழர்கள் (9 சதவீதம்), இன்னும் பிற சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்தி விடும் என்பதை உணர்ந்து இருந்தார். அதற்குப் பதிலாக, ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆங்கிலம் காலனி ஆதிக்கத்தின் மூலம் வந்த மொழி. ஆயினும், அது எந்தவொரு சமூகத்தையும் சாராத நடுநிலை மொழி ஆகும். சிங்கப்பூரின் இருமொழிக் கல்விக் கொள்கை – பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆங்கிலமும், பண்பாட்டு அடையாளத்திற்காக தாய்மொழிகளும் என்கிற கொள்கை சமூக நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய ஆளுகை, மிகநல்ல பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உருவாக்கியது.
மொழி என்னும் பிரிவினைக் கோடு
ஒற்றை மொழியைத் திணிப்பதன் ஆபத்துகள் குறித்தும் வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. ரஷ்ய மொழியை ஊக்குவிப்பதன் மூலமும், ரஷ்ய மொழி அல்லாத பிற மொழிகளை ஒடுக்குவதன் மூலமும் ஒருங்கிணைந்த தேசிய அடையாளத்தை உருவாக்க சோவியத் யூனியன் மேற்கொண்ட முயற்சிகள் வெறுப்பை விதைத்தது என்றும்; மொழி தேசிய இன அடையாளமாக மாறியதுடன், சோவியத் குடியரசுகள் முழுவதும் விடுதலை இயக்கங்களுக்கான போர் முழக்கமாகவும் மாறியது என்றும் டேவிட் எஃப். மார்ஷல் தனது The Role of Language in the Dissolution of the Soviet Union (1992) என்கிற கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் அனுபவமும் இதேபோன்ற கதையை எடுத்துரைக்கிறது. உருது மொழியை மட்டுமே ஒற்றை தேசிய மொழியாகத் திணிக்கும் முடிவு, அந்நாட்டின் வங்காளி மொழி பேசும் பெரும்பான்மையினரை அந்நியப்படுத்தியது. இது பிரிவினைக்கான விதைகளை விதைத்து, கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசமாக உருவாவதில் முடிந்தது.
இந்தியாவும் முக்கியமான சவால்களை எதிர்கொண்டது. அரசமைப்பு சபையில், சில இந்தி ஆதரவாளர்கள், முக்கியமான வட்டார மொழிகளைக்கூட எட்டாவது அட்டவணையில் சேர்க்கக் கூடாது என்று எதிர்த்தனர். அவ்வாறு அட்டவணையில் சேர்த்தால் பிரிவினை ஊக்கம் பெறும் என்று அஞ்சினார்கள். இந்திக்கு இணையாக ஆங்கிலத்தை இணை ஆட்சி மொழி ஆக்குவதையும் எதிர்த்தனர். மொழிவாரி மாநிலங்கள் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்கிற தவறான கருத்து, மொழிவாரி மாநில மறுசீரமைப்பைப் பல ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட்டது.
ஆந்திரப்பிரதேசத்தைத் தனி மாநிலமாக்கக் கோரி பொட்டி ஸ்ரீராமுலு 1952ம் ஆண்டில் 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, உயிர்துறந்த பின்னரே வரலாற்றின் போக்கு மாறியது. மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 (States Reorganisation Act, 1956) இந்தியாவின் வரைபடத்தை மொழிவாரியாக மாற்றியமைத்தது. இது ஒன்றியத்தைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, பலப்படுத்தியது. இதனையே, இந்தியாவின் மொழிவாரி நெகிழ்வுத்தன்மையே இந்திய ஒற்றுமையைப் பாதுகாத்தது என்று வரலாற்றாசிரியர் ஜான் கேய் (john keay) Midnight’s Descendants (2014) என்ற நூலில் கூறுகின்றார்.
“அந்நியமானது” என்கிற மாயை
இதனைச் சிந்தித்து பாருங்கள். உருளைக்கிழங்கு, தக்காளி, மொச்சைக் கொட்டை, மிளகாய், சோளம், காலிப்பிளவர், பூசணிக்காய், குடமிளகாய், கொய்யா, பப்பாளி, அன்னாசிப்பழம், சப்போட்டா, சீதாப்பழம், காபி, தேநீர் – இவை யாவும் இந்தியாவுக்குச் சொந்தமானவை அல்ல. இவை அனைத்தும் கடந்த நானூறு ஆண்டுகளுக்குள் போர்த்துகீசியர்கள், பிரிட்டிஷார் அல்லது டச்சுக்காரர்கள் கொண்டுவந்தவை. ஆயினும், இவை இல்லாமல் இந்திய உணவு முறையை, பண்பாட்டை அல்லது வேளாண்மையை இப்போது யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா? ஆங்கில மொழியைப் பொறுத்தும் இதுவே உண்மை. ஆங்கில மொழி இந்தியாவில் இரண்டரை நூற்றாண்டுகளாக உள்ளது. ஆகவே, இனிமேலும் ஆங்கிலம் அந்நியமானது அல்ல. இந்தியப் பேச்சு வழக்குகளாலும் சிந்தனைகளாலும் ஆழமான தாக்கமும் செழுமையும் பெற்றுள்ள இந்திய ஆங்கிலம் இப்போது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகை ஆகும்.
உண்மையான கேள்வி அந்நியத் தன்மை குறித்தது அல்ல; அதன் பயன்பாடும் நியாயமும் குறித்ததுதான். இந்த இரண்டு அளவுகோல்களிலும், தனது மதிப்பை ஆங்கிலம் நிரூபித்துள்ளது. மாகாணங்கள் அனைத்திற்கும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்திருக்க்காவிட்டால், நமது சுதந்திரப் போராட்டமே சாத்தியமாகி இருக்காது. நமது அரசமைப்பே ஆங்கிலத்தில்தான் இயற்றப்பட்டது. இந்தியை ஒற்றை ஆட்சி மொழியாக ஆக்குவது சில மாநிலங்களுக்குச் சாதகமாக இருக்கும்; மற்ற மாநிலங்களை அந்நியப்படுத்தி விடும். இதற்கு மாறாக, அனைவருக்கும் பொதுவானதும் ஆதிக்கம் செலுத்த வழி இல்லாததுமாகிய ஆங்கிலம் நடுநிலையாக இணைக்கும் பாலம் ஆகும். பிரிட்டிஷ் பேரரசு மறைந்து நீண்ட காலமான பிறகும், காலனிய ஆட்சியின் சின்னமாக அல்லாமல், நடப்பில் உள்ள உலகப் பொதுமொழியாக ஆங்கில மொழி நிலைத்திருக்கிறது. இப்போது உயர்கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், சட்டம், வணிகம், பன்னாட்டு உறவு ஆகியவற்றுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. ஒரு பண்பாட்டின் மொழியாக இந்தி மதிப்புமிகுந்த மொழியாக விளங்கினாலும், இந்த உலகளாவிய செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது.
அயர்லாந்து தரும் படிப்பினை

வரலாறு பொருத்தமான உதாரணம் ஒன்றை வழங்குகிறது. 1922ல் சுதந்திரம் பெற்ற பிறகு, அயர்லாந்து ஐரிஷ் கேலிக் மொழியை முதல் ஆட்சி மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாம் ஆட்சி மொழியாகவும் அறிவித்து, கேலிக் மொழியை வளர்க்க முயன்றது. பல ஆண்டுகளாக அரசு ஆதரவு அளிக்கப்பட்டாலும், நவீன நிர்வாகம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பான செயல்பாடுகள் கேலிக் மொழியில் மேற்கொள்வதற்கான தேவை எழவில்லை. அரசமைப்பில் நீடித்திருந்தாலும், அயர்லாந்தின் நிர்வாகத்திற்கும் தேசிய வாழ்க்கைக்குமான நடைமுறை மொழியாக ஆங்கிலம் மாறிவிட்டது. இது நடைமுறைப் பயன்பாட்டின் அளவைக் கொண்டு, மொழிப் பெருமிதத்தைச் சமநிலைப்படுத்த வேண்டும் என்பதற்கான நினைவூட்டல் ஆகும்.
எனவே பழமையான, பரந்த, பலதரப்பட்ட நாகரிகத்தைக் கொண்டுள்ள இந்தியாவை ஒற்றை மொழியைக் கொண்டு இணைக்க முடியும் என்ற அறிவுக்கு ஒவ்வாத கற்பனையை கைவிட வேண்டும். எந்த மொழியும் முன்னுரிமை பெற்றதாகவோ அல்லது எந்த மொழியும் ஒதுக்கப்பட்டதாகவோ இருக்கக் கூடாது.
தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கை

அரசமைப்பு அல்லது சட்ட அனுமதி இல்லாமல் 1968ல் கொண்டுவரப்பட்ட இந்தியாவின் மும்மொழிக் கொள்கை பன்மொழித் திறன், நாட்டு ஒருமைப்பாடு, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை ஊக்குவிக்க முயன்றது. இந்தக் கொள்கை வெற்றி பெற்றிருந்தால், 1968 முதல் தனது இருமொழிக் கொள்கையை உறுதியாகப் பின்பற்றிவரும் தமிழ்நாட்டைத் தவிர, இந்தியா முழுவதும் இன்று வெற்றிகரமாகப் பன்மொழித் திறன் நிலவி இருந்திருக்க வேண்டும். மாறாக, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, வெறும் 7சதவீதம் இந்தியர்கள் மட்டுமே மூன்று மொழிகளை அறிந்திருக்கிறார்கள்; இந்தி பேசும் மாநிலங்களில் மும்மொழிகளை அறிந்தவர்கள் எண்ணிக்கை 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
இந்தத் தோல்வியைக் கல்வித்துறை ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. தேசிய சாதனைநிலை ஆய்வுகள் (The National Achievement Surveys, NAS 2017, 2021) எட்டாம் வகுப்பு மாணவர்களில் பாதியளவுக்கும் குறைவானவர்களே, தங்கள் முதலாம் மொழியில் வகுப்புத் தரத்திற்கு ஏற்ப படிக்கவோ எழுதவோ முடிந்தது என்பதைக் கண்டறிந்தது. அதே சமயம், ஆங்கிலத் திறன் சாதாரணமாகவே இருந்தது. கல்விநிலை ஆண்டு அறிக்கை (The Annual Status of Education Report, ASER 2022) கிராமப்புறப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்களில் கிட்டத்தட்ட 30சதவீதம் பேர் தங்கள் தாய்மொழியில் இரண்டாம் வகுப்புப் பாடத்தைக்கூட படிக்க முடியவில்லை என்பதையும்; பாதிக்கும் மேற்பட்டவர்களால் அடிப்படை ஆங்கிலச் சொற்றொடர்களைக்கூட படிக்க முடியவில்லை என்பதையும் வெளிப்படுத்தியது. தேசிய சாதனைநிலை ஆய்வுகள் அல்லது கல்விநிலை ஆண்டு அறிக்கை ஆகிய இரண்டுமே மூன்றாவது மொழியின் திறனை மதிப்பிடாமல், அவை மும்மொழிக் கொள்கையின் தோல்வியை வசதியாக மறைத்துவிடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு காலம் நீடித்து, இவ்வளவு குறைவாகச் சாதித்த அரசு முன்னெடுப்புகள் மிகக் குறைவானவையே. மும்மொழிக் கொள்கையின் பொருத்தத்தைக் குறித்து மறுபரிசீலனை செய்வதற்குப் பதிலாக, தேசிய கல்விக் கொள்கை 2020 அறிக்கை மும்மொழிக் கொள்கையை மறுபடியும் வலியுறுத்தியுள்ளது. இது, கருத்துநிலை உண்மையை மறைத்துவிடும் அல்லது மறந்துவிடும் என்பதற்கான ஓர் எளிய எடுத்துக்காட்டு ஆகும். பல குழந்தைகள் தங்கள் முதலாம் – இரண்டாம் மொழிகளைக் கற்கப் போராடும்போது, மூன்றாவது மொழியைத் திணிப்பது நியாயப்படுத்த முடியாதது. தேசிய முன்னுரிமை என்பது மூன்று மொழிகளை மோசமாகக் கற்பிப்பதற்குப் பதிலாக, இரண்டு மொழிகளைச் சிறப்பாகக் கற்பிப்பதாக இருக்க வேண்டும்.
ஆராய்ச்சி கூறுவது என்ன?
மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பவர்கள், மூன்றாவது மொழி அறிவுத் திறன்களை அதிகரிக்கிறது என்று அடிக்கடி கூறுகிறார்கள். நம்பகமான ஆராய்ச்சி ஆதாரம் எதுவுமில்லாமல் தேசிய கல்விக் கொள்கை 2020 அறிக்கை இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறது. அறிதிறன் குறித்த அறிவியல் (Cognitive science) இதை இன்னும் நுணுக்கமாகப் பார்க்கிறது. மேம்பாடுடைய நிர்வாகச் செயல்பாடு, சிக்கலைத் தீர்க்கும் சிறந்த திறன், அறிதிறன் வேகம் அதிகரிப்பு ஆகிய இருமொழித் திறனின் நன்மைகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த நன்மைகள் இரண்டு மொழிகளுக்கு மேல் கற்கும்போது நேர்கோட்டில் அதிகரிப்பதில்லை.
மூன்றாவது மொழி கற்றல் குறித்த கேம்பிரிட்ஜ் கையேடு (The Cambridge Handbook of Third Language Acquisition), மாணவர்கள் கற்றலில் திக்குமுக்காடாமல் இருக்கும்போது மட்டுமே பன்மொழித் திறன் பெறுதல் சாத்தியம் என்று கூறுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் கற்கும் மாணவர்கள் இன்னும் தங்கள் முதலாம் மொழியையும், இரண்டாம் மொழியையும் கற்கத் திணறும்போது – மூன்றாவது மொழியைச் சேர்ப்பது அறிதிறன் சுமையை அதிகப்படுத்துகிறது; மனச் சோர்வை ஏற்படுத்துகிறது; மூன்று மொழிகளிலும் திறன்பெற முடியாமல் போவதற்கு வழிவகுக்கிறது. இரண்டாம் மொழி இழப்பு மிகவும் பொதுவானது. மொழிகளுக்கு இடையேயான குறுக்கீடு உச்சரிப்பு, இலக்கணம், சொல்தொகுதி போன்றவற்றிலும் குழப்பங்களை ஏற்படுத்தும். மூன்று மொழிகளில் உண்மையாக சரளமான புலமை பெறுதல் மிகவும் அரிதானது; பொதுவாக, மொழி ஒன்று முதன்மைபெற, மற்ற மொழிகள் மறைகின்றன.
கற்கும் சுமை சமத்துவமின்மையையும் சுட்டுகிறது. பழங்குடி மொழிகளையும், பிற அட்டவணையில் சேர்க்கப்படாத மொழிகளையும் வீட்டில் பேசும் குழந்தைகளுக்கு, மும்மொழிக் கொள்கை நான்கு மொழிகளைக் கற்க வேண்டிய கொடிய நிலைமையை உருவாக்குகிறது: 1. வகுப்பறையில் கற்பிக்கப்படாத அவர்களின் தாய்மொழி; 2. பயிற்றுமொழியாக பயன்படுத்தப்படுகிற மாநில மொழி; 3. பாடத்திட்டக் கொள்கையால் திணிக்கப்பட்ட இந்தி அல்லது சமஸ்கிருதம்; 4. குறைவான வசதிகளுடனே கற்பிக்கப்படுகிற ஆங்கிலம். இதன் விளைவாக அறிதிறன் சுமை, மனப்பாடம் செய்தல், மொழி இழப்பு, இடைநிற்றல் விகிதங்கள் அதிகரிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. தேசிய கல்விக் கொள்கை 2020 அறிக்கையின் கடுமையான மும்மொழிக் கொள்கை இந்தச் சிக்கலான தன்மைகளைப் புறக்கணித்து விடுகிறது.
தெரிவு செய்தல் என்னும் பொய்மை
இந்தி திணிக்கப்படாது என்றும், மாணவர்கள் விரும்பும் மூன்று மொழிகளையும் தேர்வு செய்ய சுதந்திரம் உண்டு என்றும், அவற்றில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் தேசிய கல்விக் கொள்கை 2020 அறிக்கை வலியுறுத்துகிறது. இந்த வாக்குறுதி பொய்மையே. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து வெவ்வேறு மூன்றாவது மொழிகளைக் கற்க விரும்புகின்றார்கள். கொள்கையளவில், பள்ளி இந்த ஐந்து மொழிகளையும் கற்பிக்கும். ஆனால் நடைமுறையில் தகுதிவாய்ந்த மொழி ஆசிரியர்களை நியமிப்பது, பாடப்புத்தகங்களைக் கொள்முதல் செய்தல், வகுப்புகளுக்குக் கால அட்டவணை வகுப்பது ஆகியவை வசதிகளை உருவாக்குவது அளவிலும் நிதி அளவிலும் சாத்தியமற்றன.
இந்தி, சமஸ்கிருதம் ஆகியவை இயல்பான தெரிவுகளாக மாறிவிடுகின்றன. ஏனெனில் அம்மொழிகள் ஆசிரியர்கள், பயிற்சிகள், பாடப்புத்தகங்கள் முதலான ஏராளமான மையப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டிருப்பவை. இதற்கு மாறாக, வட்டார அல்லது சிறுபான்மை மொழிகளுக்கு நிறுவன ஆதரவு இல்லை. இதனால், மாணவர்களின் உண்மையான சுதந்திரம் வெட்டிக் குறுக்கப்பட்டு, “தெரிவு” செய்ய வாய்ப்பானவையாக முன்வைக்கப்படுகின்ற இந்தியையும் சமஸ்கிருதத்தையும் நோக்கித் தள்ளும் சூழ்ச்சியான முயற்சியே மும்மொழிக் கொள்கை ஆகும்.
நிர்வாக அளவில் சாத்தியமற்றது
மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது பெரும் பொருட்செலவை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே, 8074 அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகள் – மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் மூன்றாவது மொழி ஆசிரியரை நியமிப்பதற்குச் சம்பளமாக மட்டும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ. 560 கோடிகள் செலவு ஆகும். பாடப்புத்தகங்கள், பயிற்சி, உள்கட்டமைப்பு ஆகியவற்றைச் சேர்த்தால், இந்தச் செலவின் அளவு இரட்டிப்பு ஆகும். தேசிய கல்விக் கொள்கை 2020 அறிக்கை பரிந்துரைத்தபடி, மும்மொழிக் கொள்கையைத் தொடக்க நிலைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினால், செலவுகள் பல ஆயிரம் கோடிகளாக உயரும். நாடு தழுவிய அளவில், ஆண்டுச் செலவு பல்லாயிரக்கணக்கான கோடிகளை எட்டும். இதனால் அடையக் கூடிய கல்வித்துறை சார்ந்த பயன்கள் எவையுமில்லை.
இந்தக் கண்ணோட்டத்துடன் பார்த்தோமானால், அந்தச் செலவின் ஒருபகுதியைக் கொண்டே அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கணித ஆசிரியர்களையும் அறிவியல் ஆசிரியர்களையும் நியமிக்கலாம், பள்ளிகளுக்குத் தேவையான டிஜிட்டல் கட்டமைப்பை வழங்கலாம் அல்லது செயற்கை நுண்ணறிவையும் மென்பொருள்களை எழுதும் முறைகளையும் கற்பிப்பதற்கான நாடுதழுவிய திட்டத்தைத் தொடங்கலாம். சீனா, எஸ்டோனியா, தென் கொரியா போன்ற நாடுகள் ஏற்கனவே பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவைக் கற்பிக்கும்போது, இந்தியா 20ம் நூற்றாண்டிலும் மொழி அரசியலுக்காகத் தட்டுப்பாடான வளங்களை வீணாக்கும் ஆபத்தில் மாட்டிக் கொண்டுள்ளது.
கல்வியின் நடைமுறைப் பயன்பாட்டை உயர்த்திப்பிடித்தல்

உலகம் முன்னோக்கி நகர்ந்துவிட்டது. இன்று பன்மொழித் திறன் என்பது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறானது, தேவை அடிப்படையிலானது, தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாவது. மும்பையில் உள்ள மலையாளி செவிலியர், தனது நோயாளிகளுக்குச் சேவை செய்ய மராத்தியைக் கற்றுக்கொள்கிறார், மருத்துவமனை ஆவணங்களுக்காக ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார், மேலும் வீட்டில் மலையாளம் பேசுகிறார். இது கட்டாயத்தால் அல்ல, சூழ்நிலை சாத்தியப்படுத்தியது. தாய்மொழியிலும் ஆங்கில மொழியிலும் அடிப்படை அறிவு பள்ளிக் கல்வி வழியாக வழங்கப்படுவது அவசியம். ஆனால் கூடுதல் மொழிகளை இப்போது மாணவர்கள் தேவைக்கு ஏற்பவும், வாய்ப்பிற்கு ஏற்பவும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மூலமும் தனியாகக் கற்றுக்கொள்ளலாம்.
சிங்கப்பூர், பின்லாந்து போன்ற உலகத் தரம் வாய்ந்த அமைப்புகள் இருமொழிகளில் தேர்ச்சி பெறுவதை வலியுறுத்துகின்றன. ஆனால் இந்தியாவின் மும்மொழிக் கொள்கை மாணவர்களின் சுமையைக் கூட்டுகிறது; மூன்று மொழிகள் என்கிற எண்ணிக்கைகாக மொழித் தேர்ச்சியின் தரத்தைத் தியாகம் செய்கிறது. பன்மொழித் திறன் நிலவுவதாகப் பாசாங்கு செய்வதை நிறுத்திவிட்டு, உண்மையில் இருமொழி கற்றலுக்கு மாறுவதற்கான தருணம் இது: வாய்ப்புகளுக்காக ஆங்கிலம், அடையாளத்திற்காகத் தாய்மொழிகள், மற்ற அனைத்திற்கும் தொழில்நுட்பம்.
மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்

வேலைச் சந்தையில் மொழிகளின் நடைமுறைப் பயன்பாட்டை உதாசீனம் செய்துவிட்டு, மொழிகளைக் கற்றல் பண்பாட்டு நாட்டத்தின் வெளிப்பாடாகத் தேசிய கல்விக் கொள்கை 2020 அறிக்கை கருதுகிறது. இந்த அறிக்கை, ஆங்கிலத்தைவிட குறைந்த அளவே பணி வாய்ப்புகளைக் கொண்டுள்ள சமஸ்கிருத மொழிக்கு, அதிக பக்கங்களை ஒதுக்கி விவாதிப்பதன் மூலம் தனது கருத்துநிலை ஒருதலைச் சார்பை வெளிப்படுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் உலகளாவிய போட்டித்தன்மையைக் கருத்தில்கொண்டு ஆங்கிலக் கல்வியை தீவிரமாக ஊக்குவிக்கும் நேரத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020 அறிக்கை ஆங்கில மொழிக் கல்வியின் முக்கியப் பங்கை ஏற்றுக்கொள்வதும் இல்லை, இந்தியாவில் ஆங்கிலத் திறனை மேம்படுத்தச் சீரிய முயற்சியும் எடுக்கவில்லை. ஆங்கிலத்தைத் தவிர, பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், மாண்டரின் போன்ற மொழிகள் இந்தியையும் சமஸ்கிருதத்தையும்விட உலக அளவில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. வெளிநாட்டு மொழித் தேர்வை ஒரு மொழி என்ற அளவில் (அதுவும் தவிர்க்க முடியாமல் ஆங்கிலம் என்கிற அளவில் மட்டும்) கட்டுப்படுத்துவதன் மூலம், மூன்றாவது மொழியைக் கற்பதன் ஒரே உண்மையான பயனை, அதாவது சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறுதல் என்கிற பயனைப் பெறமுடியாமல், தேசிய கல்விக் கொள்கை 2020 அறிக்கை தடை செய்கிறது.
கருத்துநிலையைத் திணிக்கும் கருவியாக அல்லாமல், மொழி என்பது வாய்ப்புக்கான பாலமாக இருக்க வேண்டும். இதன் பொருள், வலுவான ஆங்கிலப் பயிற்சி; உலகளாவிய வேலைவாய்ப்புகளுடன் இணைக்கப்பட்ட வெளிநாட்டு மொழி கற்பித்தல்; மருத்துவம், நிர்வாகம், சுற்றுலா, கிராமப்புற வங்கி போன்ற பணிகளுக்கு இந்திய மொழிகளில் பயிற்சி அளித்தல் ஆகியவை ஆகும்.
அரசமைப்பும் மொழிச்சிக்கலும்
பரவலாக நிலவும் நம்பிக்கை போலன்றி, அரசமைப்பு இந்தியை “தேசிய மொழி” என்று அறிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அரசமைப்பு XVII பகுதியிலும் (343–351 உறுப்புகளிலும்) வேறுசில இடங்களிலும் அமைந்துள்ள அரசமைப்பு நடைமுறை ஏற்பாட்டுத் தொகுப்பு மூலம் வெவ்வேறு நிறுவனங்களின் மொழித் தேவைகளைக் கையாள்கிறது.
ஒன்றியத்தின் ஆட்சி மொழி
உறுப்பு 343, தேவநாகரி எழுத்தில் உள்ள இந்தியை ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கிறது. மேலும், பதினைந்து ஆண்டுகளுக்கு (அதாவது 1965 வரை) ஆங்கிலத்தின் தொடர்ச்சியான பயன்பாட்டிற்கும் அனுமதிக்கிறது. அதன் பிறகும்கூட ஆங்கிலத்தின் பயன்பாட்டை நீட்டிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. 1960களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் 1963ல் ஆட்சிமொழிகள் சட்டத்தை இயற்றியது (1967ல் திருத்தப்பட்டது). இது இந்திக்கு இணையாக ஆங்கிலம் காலவரையின்றித் தொடர அனுமதிக்கிறது.
மாநில ஆட்சி மொழி
உறுப்பு 345, ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றமும் மாநிலத்திற்குள் பயன்பாட்டில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை – அல்லது இந்தியை – மாநிலத்தின் உள் நிர்வாகத்திற்கான ஆட்சி மொழியாக (மொழிகளாக) ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.
இணைப்பு மொழி
உறுப்பு 346, ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான, ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் இடையிலான அலுவல்தொடர்பு, ஒன்றியத்தின் ஆட்சி மொழியில் (அதாவது இந்தியில்) அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று அனுமதி வழங்குகிறது.
மாநிலத்தின் கூடுதல் ஆட்சி மொழி
உறுப்பு 347, மாநில மக்கள் தொகையின் “குறிப்பிடத்தக்க விகிதத்தினர்” பேசும் மொழியைக் கூடுதல் ஆட்சி மொழியாக அங்கீகரிக்குமாறு கட்டளையிட குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது.
நீதிமன்ற மொழியும் சட்டங்களை இயற்றும் மொழியும்

உறுப்பு 348, உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும், சட்டங்களை இயற்றுவதற்கும்கூட, நாடாளுமன்றம் வேறு முடிவெடுக்கும் வரை, ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று விதிக்கிறது. குடியரசுத் தலைவரின் அனுமதியுடன், மாநிலம் தன் ஆட்சி மொழியை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கலாம். ஆனால் தீர்ப்புகள், ஆணைகள் அல்லது உத்தரவுகள் ஆங்கிலத்தில்தான் பிறப்பிக்க வேண்டும். ராஜஸ்தான் (1950), உத்தரப் பிரதேசம் (1969), மத்தியப் பிரதேசம் (1971), பீகார் (1972) உயர்நீதிமன்றங்களின் நடவடிக்கைகளுக்கு இந்தியைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றுள்ளன. ஆனால் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மேற்குவங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
விண்ணப்பங்கள் செய்துகொள்வதற்கான மொழி
உறுப்பு 350, மக்கள் “ஒன்றியத்தில் அல்லது மாநிலத்தில் பயன்படுத்தப்படும் எந்த மொழியிலும்” கோரிக்கைகளை முன்வைக்க அனுமதிக்கிறது. ஆனால் பதில் அளிக்கும் மொழி குறித்து இதில் குறிப்பிடப்படவில்லை. ஒன்றிய அலுவலர்கள் இந்தியில் மட்டுமே பதிலளிக்கும்போது, விண்ணப்பதாரரின் மொழி உரிமைகளைப் புறக்கணிக்கும்போது, இந்த விடுபாடு தொடர்ச்சியான மோதலுக்கு வழிவகுத்துள்ளது.
இந்தியை ஊக்குவித்தலும் மேம்படுத்துதலும்
உறுப்பு 344, ஒன்றியத்தின் ஆட்சி நோக்கங்களுக்காக இந்தியைப் படிப்படியாகப் பயன்படுத்துவது குறித்தும், ஆங்கிலப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்தும் பரிந்துரைகளை வழங்க ‘ஆணைய’த்தையும், ‘நாடாளுமன்றக் குழு’வையும் நிறுவுகிறது.
உறுப்பு 351, இந்தியின் பரவலை ஊக்குவிக்கவும், முதன்மையாகச் சமஸ்கிருதத்திலிருந்தும், இரண்டாம்பட்சமாக மட்டுமே மற்ற இந்திய மொழிகளிலிருந்தும் சொற்களைப் பெறுவதன் மூலம் இந்தியின் சொல்தொகுதியை மேம்படுத்தவும் ஒன்றியத்திற்கு வழிகாட்டுகிறது. இது வழக்கில் உள்ள பொதுமொழிகள் (lingua francas) வளரும் முறைக்கு முற்றிலும் மாறானது. லத்தீன், பிரெஞ்சு, நோர்ஸ், அரபு, பாரசீகம் மற்றும் பல இந்திய மொழிகளிலிருந்தும் தாராளமாகச் சொற்களை ஏற்றுக்கொண்டு, செழுமையடைந்ததன் வாயிலாகவே ஆங்கிலம் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றது. இதற்கு மாறாக உருது, பாரசீகம், ஆங்கிலம் முதலான மொழிகளின் தாக்கங்களை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அதிகப்படியான சமஸ்கிருதச் சொற்களைப் புகுத்துவதன் மூலம் இந்தி தூய்மை ஆக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியைத் தாய்மொழியாகப் பேசுபவர்களும்கூட அந்நியமாக உணரும் அளவுக்கு, சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இறுக்கமான இந்தி தோன்றியுள்ளது. 1948ல் அரசமைப்பின் இந்தி வரைவில் “ஒரு சொல்கூட எனக்குப் புரியவில்லை” என்று ஜவஹர்லால் நேருவே ஒப்புக்கொண்டார்.
நாடாளுமன்ற மொழியும் மாநிலச் சட்டமன்ற மொழிகளும்
உறுப்பு 120, நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்தி அல்லது ஆங்கில மொழியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விதிக்கிறது. எனினும், சபாநாயகரின் அனுமதியுடன் எந்த உறுப்பினரும் வேறொரு மொழியில் பேசலாம். அதேபோல, உறுப்பு 210, மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள நடவடிக்கைகள் அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியில் (மொழிகளில்) அல்லது இந்தி அல்லது ஆங்கில மொழியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இங்கும், மற்ற மொழிகளில் பேச சபாநாயகரின் அனுமதி அவசியம்.
மொழிச் சிறுபான்மையினரின் பாதுகாப்பு
உறுப்பு 29, மொழிச் சிறுபான்மையினரின் மொழி, எழுத்து, பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதற்கான உரிமைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. உறுப்பு 30, மொழிச் சிறும்பான்மையினர் விரும்பும் கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் உரிமை அளிக்கிறது. உறுப்பு 350B, மொழிச் சிறுபான்மையினருக்கான அரசமைப்புப் பாதுகாப்புகளைக் கண்காணித்து அறிக்கை அளிக்க சிறப்பு அலுவலரைக் குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
உண்மையான மொழிக் கூட்டாட்சிக்கான பாதை
கிரான்வில் ஆஸ்டின் ‘இந்திய அரசமைப்பு – ஒரு நாட்டிற்கான அடிப்படை’ (The Indian Constitution – Cornerstone of a Nation) என்ற தனது புகழ்பெற்ற நூலில் குறிப்பிட்டது போல, மொழி குறித்த அரசமைப்பு ஏற்பாடுகள் முரண்பட்டோர்களின் அச்சங்களைத் தணித்த உடன்பாடு, அதேவேளையில் நீடித்த பதற்றங்களை விட்டுச்சென்ற “அரைகுறையான சமரசம்” ஆகும். அரசமைப்பு ஏற்பாடுகள் ஒற்றை மொழி தேசியவாதத்தை நிராகரிப்பதன் மூலம் ஆபத்தான தருணத்தில் ஒன்றியத்தைப் பாதுகாத்தன. ஆயினும் இந்திக்குச் சாதகமாக அதீதமான முன்னுரிமைகளை வழங்கியுள்ளன.
இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிப்பது 1950ல் அசாதாரணமான மொழி சமரசமாகத் தொடங்கியது; 1960களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் முதல் மும்மொழிக் கொள்கை குறித்த சர்ச்சைகள் ஊடாக நீடித்தது; இப்போது ஒன்றிய அரசு மத்தியத் திட்டங்கள், நாடுதழுவிய பரப்புரைகள், சட்டங்கள் ஆகியவற்றுக்குக்கூட இந்தியில் பெயரிடும் போக்காக மாறியுள்ளது. எல்லாவற்றைவிட பல வட்டார, சிறுபான்மை மொழிகளில் ஒன்றாகிய இந்தி, இலக்கிய மரபிலும் மிகவும் வளர்ந்ததோ அல்லது செழுமையானதோகூட அல்ல. ஆகவே கட்டுப்பாட்டு உணர்ச்சி, நியாய உணர்ச்சி, உண்மையான கூட்டாட்சிக் கண்ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிப்பதை ஒன்றிய அரசு கைவிடாவிட்டால், தவிர்க்கமுடியாத மோதலுக்கே இட்டுச்செல்லும்.
மொழி சமநிலையையும் நீதியையும் மீட்டெடுக்கத் தேவையான அரசமைப்புத் திருத்தங்கள் பின்வருவன ஆகும்:
1. சட்டத்திலும் நிர்வாகத்திலும் ஆங்கில மொழியை உறுதிப்படுத்தல் : உறுப்பு 343-ஐ திருத்தி, ஆங்கிலத்தை ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும்; இதனை நாடாளுமன்றத் திருத்தத்திற்கு அப்பாற்பட்டது ஆக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தை முன்மாதிரியாகக் கொண்டு – இப்போது செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பங்கள் சாத்தியமாகியுள்ள நிலையில் – எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் ஒன்றியத்தின் ஆட்சி மொழிகளாக அறிவிக்க வேண்டும். எட்டாவது அட்டவணையில் புதிதாகச் சேர்க்கப்படும் மொழிகளுக்கு, முழு அளவிலான ஒன்றிய அங்கீகாரம் பெறுவதற்குப் பத்து ஆண்டுகளை மாறும் காலமாகக் கொள்ளலாம்.
உறுப்பு 346-ஐ திருத்தி, ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையேயான – மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு மொழியாக ஆங்கிலம் நீடித்திருக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இறுதியாக, உறுப்பு 348-ஐ திருத்தி, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், சட்டங்களை இயற்றுதல் ஆகியவற்றுக்கு ஆங்கில மொழியை உறுதிசெய்து, அதனை மீளப் பெற முடியாத வகையில் ஆட்சி மொழியாக நிலைநிறுத்த வேண்டும். மேற்காணும் இந்தக் களங்களில் நல்ல நிர்வாகமும் நியாயமான நீதியும் தொடர தெளிவு, துல்லியம், நிலைத்தன்மை ஆகியவை அவசியம்.
2. எல்லா மொழிகளையும் சமமாக ஊக்குவித்தல்: உறுப்பு 344-ஐ திருத்தி, இந்தியை மட்டும் அல்லாமல், அனைத்து அட்டவணை மொழிகளையும் சமமாக ஊக்குவிப்பதும், வளர்ப்பதும் ஒன்றியத்தின் கடமையாக இருக்க வேண்டும். உறுப்பு 351-ஐ நீக்க வேண்டும். இந்தியின் சொல்தொகுதியை “முதன்மையாகச் சமஸ்கிருதத்திலிருந்து” பெற வேண்டும் என்ற வழிகாட்டுதல், இந்தி மொழியை இயல்பாக வளர விடாமல் தடுத்துள்ளது. மேலும் அரசமைப்பு நிலைநாட்ட வேண்டிய மொழி நல்லிணக்க உணர்வைச் சிதைத்துள்ளது.
3. உறுப்பு 347-ஐ நீக்குதல்: மொழிவாரி மாநில மறுசீரமைப்புக்கு (1956) முந்தைய நிலைமையைக் கருத்திக்கொண்டு வரையப்பட்ட உறுப்பு 347, மாநில சுயாட்சியை மீறுகிறது என்பதாலும், மாநிலத்தின் இசைவு இல்லாமல் இந்தி அல்லது வேறெந்த மொழியையும் திணிப்பதற்கான மறைமுக அரசமைப்பு வழி என்பதாலும் இப்போது காலப் பொருத்தமற்றதாகி விட்டது. அது நீக்கப்பட வேண்டும்.
4. நாடுதழுவிய மொழி ஆணையத்தை அமைத்தல்: உறுப்பு 350B-யில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் கொண்ட அலுவலகத்திற்கு மாற்றாக, “நாடுதழுவிய மொழி ஆணையம்” என்ற விரிவான அதிகாரம் பெற்ற ஆணையத்தை உருவாக்க வேண்டும். இந்த ஆணையம் அழிந்துபோகும் மொழிகளை அடையாளம் காணுதல், சொல்தொகுதியையும் வாய்மொழி மரபுகளையும் ஆவணப்படுத்துதல், அந்த மொழிச் சமூகம் தலைமையிலான பேணுகை, புதுப்பித்தல் முதலான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். உயிரியல் பன்முகத்தன்மையை நாட்டின் செல்வமாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும் என்பதனால், ஈடிணையற்ற இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.
5. பதில் அளித்தலில் மொழி சமநிலையைப் பேண உறுதிப்பாடு: குடிமக்களின் கோரிக்கை எந்த மொழியில் (மாநிலத்தின் ஆட்சி மொழி அல்லது ஆங்கிலம்) விடுக்கப்பட்டதோ, அதே மொழியில் ஒன்றிய அரசாங்க அலுவலகங்கள் பதில் அளிக்க உறுப்பு 350-ஐ திருத்த வேண்டும். பதில்களை இந்தியில் மட்டும் அளிக்க வரையறுப்பது கூட்டாட்சி உணர்வுக்கு எதிரானது; மேலும் இந்தி பேசாத குடிமக்களைத் தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம்நிலை குடிமக்களாக மாற்றுகிறது.

6. பன்மொழிக் குரல்கள் மூலமாக மக்களாட்சி தழைக்கட்டும்: நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் ஆட்சி மொழிகள் அல்லாதவற்றைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் காலப் பொருத்தமற்ற “பேச அனுமதி” கோரும் விதியை ஒழிக்க, உறுப்புகள் 120, 210 ஆகியவற்றைத் திருத்தப்பட வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் மொழிபெயர்ப்பு உள்ள இந்தக் காலத்தில், இத்தகைய கட்டுப்பாடுகள் தேவையற்றவை; மக்களாட்சிக்கு எதிரானவை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதியும் தங்களுக்குச் சிறப்பாகத் தெரிந்த மொழியில் பேச சுதந்திரம் நிலவ வேண்டும். இந்தியா தனது நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் ஒலிக்கும் பன்மொழிக் குரல் ஓசைகளின் நயத்தில் பெருமைகொள்ள வேண்டும். ஒருமைப்பாட்டின் பெயரால், அக்குரல்களை நெரிக்கக் கூடாது.
முடிவுரைக் குறிப்புகள்
மொழி குறித்த இந்திய விவாதம் முடிவற்ற கதை ஆகும். ஒவ்வொரு புதிய தலைமுறையுடனும் அவ்விவாதம் வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறது. மேலும் ஒன்றிய அரசாங்கத்தின் ஒருமைப்பாட்டை நோக்கிய தேடல், அரசமைப்பின் அனைவரையும் உள்ளடக்கும் உணர்வை விஞ்சும்போதெல்லாம் மீண்டும் அவ்விவாதம் எழுகின்றது. கூட்டாட்சி சமநிலையைக் குலைத்த கடந்த காலத்தின் பழம் எச்சங்களான, அரசமைப்பின் மொழி குறித்த ஏற்பாடுகளைவிடச் சீர்திருத்தம் செய்ய வேண்டிய பகுதி வேறு எதுவும் இல்லை. இந்தியாவை வலிமை இழக்கச் செய்வதற்கு அல்ல, நியாயமான – உறுதியான அடித்தளங்களில் இந்திய ஒற்றுமையை மீட்டெடுப்பதற்காகவே மொழிச்சிக்கல் குறித்த புதிய விவாதத்தைத் தொடங்கிய வேண்டிய தருணம் இது. பெல்ஜியம், கனடா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் காட்டியுள்ளது போல, நாடுகள் ஒரே மொழிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அல்ல, தொலைநோக்குடன் அனைத்து மொழிகளுக்கும் சமமரியாதையை அளித்து அனைவரையும் அரவணைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே செழிக்கின்றன.

• கே. அசோக் வர்தன் ஷெட்டி, IAS (ஓய்வு),
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், சென்னை.
ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்.
