அதானியின் மோசடி நிறுவனங்களில் செபியின் தலைவர் மாதபி புரோ பச் பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
அதானி குழுமம் தங்களது பங்குகளை உயர்த்திக் காட்டி கடன் பெறுதல், வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக கடந்த 2023-ஆம் ஆண்டு ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. இது தேசிய அரசியலில் பெரும் பேசுபொருளானது.
இந்தநிலையில், அதானி முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகிய இருவரும் கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி கட்டுப்பாட்டில் இயங்கும் மொரிஷியஸ், பெர்முடா நிறுவனங்களில் மறைமுகமாக பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் நேற்று (ஆகஸ்ட் 10) கட்டுரை வெளியிட்டது. இதற்கு மாதபி புச் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பியுமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அதானியின் ஊழல் குறித்து விசாரிக்க செபி தயக்கம் காட்டுவதாக நீண்டகாலமாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
அதானியின் முறைகேடு நிறுவனங்களில் மாதபி புச் பங்கு வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள கட்டுரை அதிர்ச்சியளிக்கிறது.
அதானி மீதான செபி விசாரணையில் உள்ள அனைத்து முரண்பாடுகளையும் களைய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதானியின் மெகா ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரித்தால் மட்டுமே, இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்களா என்பது தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென 9-ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடைந்தது. இப்போது அதற்கான காரணம் புரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயநாடு நிலச்சரிவு: பெற்றோர் உடல் கிடைக்கவில்லை… வேதனையுடன் இங்கிலாந்து புறப்பட்ட நர்ஸ்!
வைப் மோடில் இளைஞர்கள்… வேளச்சேரியில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்!