அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதானி குழுமத்தை அடுத்து, ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் கூறியுள்ளது.
விரைவில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட உள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (மார்ச் 23 ) தெரிவித்திருந்தது. இதன் மூலம் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அடுத்த டார்கெட் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், அதானி குழுமத்தை அடுத்து தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரான ஜாக் டோர்சி முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி நடத்தி வரும் டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனம் ’பிளாக்’.
பணம் செலுத்துவதற்கு பிளாக் வலைத்தளத்தை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டியதாக புகார் தெரிவித்துள்ளது ஹிண்டன்பெர்க் நிறுவனம்.
போலி கணக்குகள் தொடங்க வாடிக்கையாளர்களை பிளாக் நிறுவனம் அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசின் விதிகளை பின்பற்றாமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தாமல் தொடர்ந்து ஏமாற்றியதாகவும் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதோடு ’பிளாக்’ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு பதில் சிறிய பதிவு நிறுவனங்கள் வழியாக பணப் பரிவர்த்தனை நடத்தியதாகவும் ஹிண்டன்பெர்க் புகார் தெரிவித்துள்ளது.
இதனால் ஜாக் டோர்சி தனிப்பட்ட முறையில் 500 கோடி டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 40,100 கோடி) வருமானத்தை அதிகரித்துக் கொண்டதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது ஹிண்டன்பர்க்.
மு.வா.ஜெகதீஸ் குமார்