ADVERTISEMENT

“அதானி நிறுவனங்களில் ‘செபி’ தலைவருக்கு பங்குகள்”… மீண்டும் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க்

Published On:

| By Selvam

இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தலைவர் மாதபி புரோ புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் வெளிநாடுகளில் உள்ள அதானியின் மோசடி நிறுவனங்களில் பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த 2023-ஆம் ஆண்டு அதானி குழும முறைகேடுகள் குறித்து வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் புயலை கிளப்பியது.

ADVERTISEMENT

அதாவது இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான அதானி குழுமம் தங்களது பங்குகளை உயர்த்திக் காட்டி அதன்மூலம் அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு வைத்தது.

ADVERTISEMENT

இதற்கு அதானி குழுமம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.

அதானி குழும முறைகேடு தொடர்பாக ஹிண்டர்பர்க் வைத்த குற்றச்சாட்டுக்களை இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரணை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில், செபியின் தலைவர் மாதபி புரோ புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள கட்டுரையில், “வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் தொடங்கி அதானி குழுமம் பல்லாயிரக்கணக்கான கோடிகளை வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதுதொடர்பாக நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை செபி முறையாக விசாரணை நடத்தவில்லை.

தற்போதைய செபியின் தலைவரான மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகிய இருவரும் கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி கட்டுப்பாட்டில் இயங்கும் மொரிஷியஸ், பெர்முடா ஆகிய ஷெல் நிறுவனங்களில் மறைமுகமாக பங்குகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி இந்த நிறுவனங்களில் பங்குகளை பெறக்கூடிய ஐபிஇ பிளஸ் ஃபண்ட் 1 கணக்கை மாதபி மற்றும் தவால் புச் தொடங்கியிருக்கின்றனர். இவர்களின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்” என்று தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க்கின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று மாதபி புச் மற்றும் அவரது கணவர் மறுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆகஸ்ட் 10-ஆம் தேதி எங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் சுமத்திய குற்றச்சாட்டுக்களை கடுமையாக எதிர்க்கிறோம். அதில் எந்த உண்மையும் இல்லை.

எங்களது வாழ்க்கையும் நிதிப்பரிவர்த்தனையும் திறந்த புத்தகம். பணப்பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் அனைத்தும் செபிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது.

மேலும், முழுமையான வெளிப்படைத்தன்மையை கருத்தில் கொண்டு, உரிய நேரத்தில் விரிவான அறிக்கையை வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சத்யராஜின் ‘ மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் ‘ வெப் சீரிஸ்… டிரெய்லர் ரிலீஸ்!

டாப் 10 நியூஸ்: நீட் பிஜி தேர்வு முதல் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு விழா வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share