57 கோடி யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகளை இழந்த இமயமலை!

Published On:

| By christopher

கடந்த 20 ஆண்டுகளில் 57 கோடி யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகளை இமயமலை இழந்துள்ளதாக அதிர்ச்சி ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவின் வடக்கில் இயற்கை அரணாக எழுந்து நிற்கிறது இமயமலை. ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை நீண்டுள்ள இந்த இமயமலை இந்தியாவின் முக்கிய நீர்ஆதாரமாக உள்ளது. அங்கு நிறைந்திருக்கும் பனிப்பாறைகள் காரணமாக சிந்து, சட்லெஜ், பிரம்மப்புத்திரா என வற்றாத ஆறுகள் இமயமலையிலிருந்து பாய்ந்து இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதிக்கு தண்ணீரை வழங்குகின்றன.

ADVERTISEMENT

கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் இமயமலை அதன் வெண்ணிற அழகியலை தாண்டி இந்தியாவின் இயற்கை அரண் மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்கால புயல்கள் இந்தியாவிற்குள் நுழைவதை தடுத்து கடுமையான குளிரில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இந்தியாவிற்கு பருவமழையை தவறாமல் வழங்குவதிலும் இமயமலையின் பங்கு அவசியமானது.

இவ்வாறு இந்தியாவிற்கு கிடைத்த இயற்கையின் அருட்கொடைகளில் ஒன்றாக உள்ள இமயமலை, உலக வெப்பமயமாதலால் பெரும் ஆபத்தில் சிக்குண்டுள்ளது. அதிலும் கடந்த 20 ஆண்டுகளில் இமயமலையின் பனிப்பாறைகள் கற்பனைக்கு எட்டாத வகையில் உருகியுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

ADVERTISEMENT

இது தொடர்பாக, இங்கிலாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம், சீன அறிவியல் அகாடமி, ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கார்னகி மெலன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்தினர்.

இந்த ஆய்வு அறிக்கையானது நேச்சர் ஜியோ சயின்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய இமயமலையில் மிகப்பெரிய அளவில் உருகிவரும் பனிப்பாறைகள் குறித்து மதிப்பிடப்பட்டுள்ளது. அங்கு பனிப்பாறை உருகுவதால், அருகிலுள்ள ஏரியில் நீர்வரத்து மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2000-2020 க்கு இடைப்பட்ட காலத்தில் நீருக்கடியில் நிகழும் பனிப்பாறை மாற்றங்களை செயற்கைக்கோள்களால் காண இயலாததால் நீருக்கடியில் நடைபெறும் பனிப்பாறைகளின் இழப்பு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன. ஏனென்றால் இதுவரை பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் தரவுகள் மூலம் ஏரி நீரின் மேற்பரப்பை மட்டுமே அளவிட முடியும்.

இந்நிலையில் நீரின் மேற்பரப்பிற்குக் கீழே கண்ணுக்குத் தெரியாமல் அதிவேகமாக இமயமலையில் உருகிவரும் பனிப்பாறைகளின் பெருமளவிலான இழப்பை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவில் கடந்த 2000 ஆண்டு முதல் 2020 வரை, இப்பகுதியில் உள்ள ப்ரோக்லேசியல் ஏரிகள் எண்ணிக்கையில் 47 சதவீதமும், பரப்பளவில் 33 சதவீதமும், அளவு 42 சதவீதமும் அதிகரித்துள்ளன.

இதனால் நிலப்பரப்பின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள பனிப்பாறைகள் அதிகபடியாக உருகி வருவதாகவும், இது சுமார் 57 கோடி யானைகளின் எடைக்கு சமம். அதாவது உலகில் வாழும் மொத்த யானைகளின் எண்ணிக்கையை விட 1000 மடங்கு அதிகம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரான டேவிட் ரோன்ஸ் கூறுகையில், ”எங்களின் இந்த ஆராய்ச்சி பனிப்பாறை-நீரியல் மாதிரிகளுக்கு முக்கியமான தரவை வழங்குகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இமயமலையின் நீர் வள மேலாண்மைக்கு இது ஆதரவளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் மத்திய அரசு: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

தசரா இயக்குநருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share