பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக மீண்டும் தமிழ்நாடு வருகிறார். இந்த நிலையில் அவருடைய பயண விவரங்கள் வெளியாகி உள்ளன.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், கடைசி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசி உட்பட பல்வேறு தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி பரப்புரை முடிவடையும் நாளில் தமிழ்நாடு வர உள்ளார்.
இதற்காக டெல்லியில் இருந்து மே 30ஆம் தேதி விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு 3.55 மணிக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு 4.35 மணிக்கு வர உள்ளார்.
மே 31 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் 3.25 மணிக்கு கன்னியாகுமரி ஹெலிபேடு தளத்தில் இருந்து MI-17 ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான IAF – BBJ விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
குமரி வரும் பிரதமர் மோடி, மே 31ஆம் தேதி கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளதாகவும், 24 மணி நேர தியானத்துக்கு பின்னர் அங்கிருந்து கிளம்புவார் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
2019 மக்களவைத் தேர்தல் சமயத்தில், தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மலைக்கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி சுமார் 20 மணி நேரம் தியானம் செய்தார்.
கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்துள்ள கேதர்நாத் கோயிலுக்கு கடந்த முறை சென்ற அவர் இந்தமுறை முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் தியானம் செய்யவுள்ளார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்னதாக ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் மோடி வழிபாடு செய்தார். ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக் கடலுக்குச் சென்று புனித நீராடினார். ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு புனித நீரை எடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா