இமாச்சல் தேர்தல்: பிரியங்கா காந்தியின் புது திட்டம்!

Published On:

| By Monisha

இமாச்சல் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று (அக்டோபர் 14) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

இமாச்சல் பிரேதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2023 ஜனவரி 8 ஆம் தேதி நிறைவுபெற உள்ளது.

இதையடுத்து, அந்த மாநிலத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (அக்டோபர் 14) அறிவித்தார்.

இந்நிலையில் இமாச்சலுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று (அக்டோபர் 14) இமாச்சல் பிரதேசம் சோலானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரியங்கா காந்தி உரையாற்றினார்.

himachal pradesh assembly election

அப்போது பேசிய அவர், ”இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு கூடும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

”முதலாவதாக ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அமைத்து கொடுக்கப்படும்.

இரண்டாவதாக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”தற்போது ஆட்சியில் உள்ள பாஜக ஓய்வூதியத் திட்டத்தை திரும்பக் கொண்டு வர விரும்பவில்லை.

ஆனால் பெரிய தொழில் அதிபர்களின் கடனை தள்ளுபடி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாக அரசுப் பணியிடங்கள், ஆட்களை நியமிக்காமல் காலியாக உள்ளன. பாஜகவினர் இளைஞர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் பற்றிக் கவலைப்படுவதில்லை” என்று கூறினார்.

மோனிஷா

சீரியல் நடிகர் அர்ணவ் கைது!

இமாச்சல் பிரதேசம்: நவம்பர் 12 சட்டமன்றத் தேர்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share