ஆர்டர்லி: 4 மாதங்களில் ஒழிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Kalai

ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்று தமிழக அரசு மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 23) உத்தரவிட்டு இருக்கிறது.

காவலர் குடியிருப்பை காலி செய்வது தொடர்பாக மாணிக்கவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆர்டர்லி முறை குறித்து உயர் நீதிமன்றம் தானாக விசாரிக்கத் தொடங்கியது.

ADVERTISEMENT

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் அடிமைகள் போல் நடத்தப்படும் இந்த ஆர்டர்லி முறை வெட்கக்கேடானது என்று நீதிமன்றம் கடந்த வாரம் கண்டனம் தெரிவித்தது.

அப்போது பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளதாகவும்,  மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்பப் பெறப்படுவார்கள் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என்று அனைத்து  அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்தது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், ஆர்டர்லி முறையை ஒழிக்க டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது திருப்தி அளிப்பதாகக் கூறினார்.

இந்தநிலையில் வழக்கின் இறுதி உத்தரவு இந்தவாரம் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக 1979-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி 4 மாதங்களில் ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்று தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

உயரதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் அலுவலக உதவியாளர் அல்லது இருப்பிட உதவியாளர் பணிகளை உருவாக்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது.

ஆர்டர்லி பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தால் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் எந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டார்களோ அந்தப் பணியை மட்டும் வழங்கி அரசியலமைப்பு சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. அதேபோன்று காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலை.ரா

ஆர்டர்லி முறை ஒழிப்பு : தமிழக அரசை பாராட்டிய உயர் நீதிமன்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share