தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சிக்கொடி கம்பங்களையும் மூன்று மாதத்துக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் பழைய விளாங்குடி காமாட்சி நகரை சேர்ந்தவர் சித்தன். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மேற்கு 6ஆம் பகுதி அதிமுக செயலாளராக பதவி வகித்து வருகிறேன். எனது மனைவி நாகஜோதி வார்டு 20ல் மாநகராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார்.
எங்கள் கட்சியின் கொடி கம்பம் காமாட்சி நகரில் கடந்த 30 ஆண்டுகளாக உள்ளது. இதன் அருகே மின்சார கம்பி செல்வதால் இந்த கொடி கம்பத்தை அகற்றி எனது உறவினர் வீட்டருகே உள்ள இடத்தில் மாற்றி ஊன்ற அனுமதி கோரி மாநகராட்சி ஆணையரிடம் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை.
ஆனால் அதிமுக கொடி கம்பம் நடுவதற்கு அனுமதி கோரிய இடத்தின் அருகே ஆறு மாதங்களுக்கு முன்பு அனுமதி இன்றி திமுக கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநகராட்சி ஆணையரை நேரில் அணுகி, அதிமுக கொடிக்கம்பம் நடுவதை பற்றி கேட்டபோது, பட்டா இடங்களில் மட்டுமே கொடி கம்பம் நட அனுமதி வழங்க முடியும் என தெரிவித்தார்.
அதிமுக சார்பில் நடப்படும் கொடிக்கம்பத்தால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாது என உறுதி அளித்த போதும் அனுமதி மறுக்கப்படுகிறது.
எனவே காமாட்சி நகரில் இருக்கும் அதிமுக கொடி கம்பத்தை மாற்று இடத்தில் நடுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை கடந்த டிசம்பர் மாதம் விசாரித்த நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கில் தமிழக டிஜிபியை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார்.
பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சிகளின் கம்பங்களையும் ஏன் அகற்றக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தமிழகத்தில் அரசியல் கட்சிக்கொடி கம்பங்களால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா?. போலீசார் எத்தனை வழக்குகள் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
144 வழக்குகள் பதிவு
இந்த வழக்கு மீண்டும் கடந்த ஜனவரி 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “தமிழகத்தில் அனுமதி இல்லாத கட்சிக்கொடி கம்பங்கள் தொடர்பாக 144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொடிக்கம்பங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்களை வைப்பதற்கு தற்காலிக தடையில்லா சான்றிதழ் வழங்க மட்டுமே போலீசருக்கு அதிகாரம் உள்ளது. இந்த சான்றிதழை பெற்று மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் கொடிக்கம்பங்கள் வைக்கப்படுகின்றன” என்று கூறினார்.
அப்போது நீதிபதி இளந்திரையன், “நிரந்தரமாக கட்சிக்கொடி கம்பங்கள் வைக்க எந்த வழிகாட்டுதல்களும் விதிமுறைகளும் இல்லாத நிலையில் எவ்வாறு அனுமதி வழங்கப்படுகின்றன? கட்சிக்கொடி கம்பங்கள் வைக்கப்படும் போது அந்த இடத்துக்கு சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் இருந்து வாடகை வசூலிக்கலாமே?
பொது இடங்களில் ஏராளமான கட்சிக்கொடி கம்பங்கள் இருப்பதை காண முடிகிறது. இதனால் ஏராளமான பிரச்சனைகள் எழுகின்றன. எனவே பொது இடத்தில் கட்சிக்கொடி கம்பம் வைக்க ஏன் அனுமதி கேட்கிறீர்கள்?. ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் வைத்துக் கொள்ளலாமே?” என்று கேள்விகளை எழுப்பினார்.
இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்றுக
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 27) உத்தரவு பிறப்பித்த நீதிபதி இளந்திரையன், “தமிழகம் முழுவதும் பொது இடங்களில் சாலைகளில், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களின் கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
“சாலைகளையும் தெருக்களையும் ஆக்கிரமித்து கட்சிக்கொடி கம்பம் நடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையை பயன்படுத்துவதற்கு பல்வேறு சிரமங்களும் ஏற்படுகிறது.
கட்சித் தலைவர்கள், சமுதாய தலைவர்களின் பிறந்தநாள் நினைவு நாள் ஆகிய தினங்களில் கொடிக்கம்பம் அமைந்துள்ள பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்படுகிறது.
அதுபோன்று எங்கள் கட்சிக்கொடி கம்பம் பெரியதா? உங்கள் கட்சிக்கொடி கம்பம் பெரியதா? என்பதில் அரசியல் கட்சிகள் இடையே போட்டியும் உள்ளது. பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைக்க எந்த சட்டத்திலும் அனுமதியும் உரிமையும் இல்லை.
நிரந்தரமாக கொடிக்கம்பங்கள் நடுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க காவல்துறையினருக்கும் வருவாய் துறையினருக்கும் அதிகாரம் இல்லை.
எனவே தற்போது பொது இடங்களில் உள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களில் அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அளித்து, இரண்டு வாரங்களில் கொடிக்கம்பங்களை கட்டாயமாக அகற்ற வேண்டும். அதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சியினரிடமே வசூலிக்க வேண்டும்.
பொது இடங்களில் கட்சிக்கொடி கம்பங்களை அமைக்க எந்த அதிகாரியும் அனுமதி வழங்கக் கூடாது. அரசியல் கட்சியினர், இயக்கங்கள் முறையான அனுமதி பெற்று தங்களது சொந்த இடத்திலேயே கொடிக்கம்பங்களை நட்டுக் கொள்ளலாம்.
அதுபோன்று தனியார் இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வகுக்க வேண்டும்.
பொதுக்கூட்டம் தர்ணா மற்றும் பிரச்சாரக் கூட்டங்களின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தற்காலிக கொடி கம்பங்கள் நடலாம். இதற்கு முன்கூட்டியே வாடகை செலுத்தி அனுமதி பெற வேண்டும். அனுமதி காலம் முடிந்த பின்னர் அந்த தற்காலிக கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்.
கொடி கம்பத்துக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு பழைய நிலைக்கு கொண்டு வரப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த உத்தரவு நகலை நீதிமன்ற பதிவுத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்ப வேண்டும். இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது தொடர்பாக தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி மனுதாரரின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.