ADVERTISEMENT

லைக்கா வழக்கில் விஷாலுக்கு கால அவகாசம்!

Published On:

| By Kalai

நடிகர் விஷாலின் சொத்து விவரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் 2 வாரம் அவகாசம் வழங்கியிருக்கிறது.

விஷால் பிலிம் பேக்டரி’ என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும்  நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக,

ADVERTISEMENT

பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றிருந்தார். விஷாலின் கடன் தொகையை லைகா நிறுவனம் செலுத்தியது.

கடன் தொகை முழுவதையும் திருப்பிச்செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டே விஷாலின் கடனை லைகா நிறுவனம் செலுத்தியது.

ADVERTISEMENT

ஆனால் ஒப்பந்தத்தை மீறி நடிகர் விஷால் ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிட உள்ளதாகவும்,

அதன் சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமையை விற்க உள்ளதாகவும், அதற்கு தடை கேட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

ADVERTISEMENT

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரூ.15 கோடியை நீதிமன்ற தலைமைப்பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும் என்று நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அவர் பணத்தை செலுத்தாததால், அவரை நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடிகர் விஷால் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்ததால்தான் பணத்தைச் செலுத்தவில்லை;

தனக்கு ஒரே நாளில் ரூ.18 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 6 மாதம் ஆனாலும் கடனை செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக விஷால் விளக்கம் அளித்தார்.

ஆனால், விஷால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில், தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகவும்,

வேண்டுமென்றால் அவரது சொத்து விவரங்களையும், கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்யட்டும் என்று லைகா தரப்பில் வாதிடப்பட்டது.

இதையேற்றுக் கொண்ட  நீதிபதி, சொத்து விவரங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று விஷாலுக்கு உத்தரவிட்டு,

அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். அன்றைய தினம் நடிகர் விஷால் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் அந்த வழக்கு இன்று(செப்டம்பர் 9) விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி விஷால் ஆஜராகவில்லை.

அவரது வழக்கறிஞர் ஆஜராகி, சொத்து விவரங்கள் தொடர்பான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கேட்டார். இந்தக் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

கலை.ரா

விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share