நீதித்துறையை ஆபாசமாக விமர்சித்த புகாரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 20) உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நீதித்துறை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
அதில், ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஆனால் அவருடைய பேச்சு அரசியலமைப்பு சட்ட விரோத பேச்சாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
எனினும் அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சார்லஸ் அலெக்சாண்டர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சார்லஸ் அலெக்சாண்டர் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்தார்.
அதில் எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.
இந்த மனு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கில் தொடர் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் புகார் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
