செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Published On:

| By Jegadeesh

Senthil Balaji's wife appeals

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து , அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 18) மேல்முறையீடு செய்துள்ளார்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு.  இதயத்தில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு,  பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை  தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதனை அடுத்து இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரணை செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் கடந்த வாரம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வழங்கிய தீர்ப்பில், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்.

கைது செய்யப்பட்டால் நீதிமன்ற காவல் எடுக்க வேண்டியது அவசியம். அமலாக்கத் துறைக்குக் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தார்.

செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாகக் கருத முடியாது. சிகிச்சைக்குப் பிறகு காவலில் எடுக்கலாம்.

அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை எதிர்க்காத நிலையில், அதன் பின் நடக்கும் சோதனை, விசாரணை ஆகியவற்றை எதிர்க்க முடியாது.

கைது மற்றும் நீதிமன்ற காவல் சட்டப்பூர்வமானது. எனவே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பில் உடன்படுவதாக நீதிபதி சி.வி.காா்த்திகேயன் தெரிவித்தார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இச்சூழலில், நேற்று (ஜூலை 17) மாலை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் தான், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 18 ) மேல்முறையீடு செய்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

உம்மன் சாண்டி மறைவு: கேரள முதல்வர் உருக்கம்!

உம்மன் சாண்டி மறைவு: தலைவர்கள் இரங்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share