பிரபல ராப் இசை பாடகர் வேடனை பாலியல் தொடர்பான வழக்கில் அவரை கைது செய்வதற்கு கேரளா உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 19) தடை விதித்துள்ளது.
கேரளாவில் பிரபல ராப் இசை பாடகராக லட்சக்கணக்கான ரசிகர்களுடன் வலம் வருகிறார் ஹிரந்தாஸ் முரளி எனும் வேடன். கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நிறம், சாதி வேற்றுமைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான ராப் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். மேலும், மஞ்ஞுமல் பாய்ஸ், நரிவேட்டை திரைப்படங்களிலும் பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் கொச்சியில் பெண் மருத்துவர் ஒருவர், வேடன் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 2021 மற்றும் 2023 க்கு இடையே பாலியல் வன்கொடுமை மற்றும் நிதி மோசடி பெண் மருத்துவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்யலாம் என்ற அச்சத்தின் மத்தியில் போலீசார் முன்னதாக ஒரு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் வழக்கில் முன் ஜாமீன் கோரி வேடன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது புகார்தாரர் தரப்பில், வேடன் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், இது தொடர்பாக அவர் சமூக ஊடகங்களில் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், “புகார்தாரர்களின் வாதங்கள் ஊடக செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் ஊடக செய்திகளை மட்டும் குற்றத்தை நம்ப முடியாது என்றும் கூறினார்.
மேலும் சம்மதத்துடன் கூடிய உறவு எப்படி பாலியல் வன்கொடுமையாக மாறும்? உறவில் விரிசல் ஏற்படும்போது, அதை பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியாது என்று தெரிவித்த நீதிபதி வேடனின் முன் ஜாமீன் மீதான வழக்கு நாளை (ஆகஸ்ட் 20) பரிசீலிக்கப்படும் வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
