லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை வட்டியுடன் செலுத்த விஷாலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனத்திற்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது.
இதனால், ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் அனைத்து பட உரிமைகளையும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் படத்தை வெளியிட்டதாக கூறி அவரிடம் பணத்தை திருப்பி தர கேட்டு லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, லைகாவுக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் கொடுக்க விஷாலுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தவை எதிர்த்து விஷால் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷஃபீக் அமர்வு இன்று (நவம்பர் 24) விசாரித்தது.
அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே? என விஷால் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், “15 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம். வட்டி மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வருகிறது. லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை” என்று வாதம் முன்வைத்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், அப்படியானால் திவாலானவர் என அறிவிக்க தயாராக இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினர்.
அதேசமயம் 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம். இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது என கூறி தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர் நீதிபதிகள். மேலும் 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்யவும் விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர்.
இந்த மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்துவைத்தனர்.
