கோடையில் சிலருக்கு கோபமும், பொறுமையின்மையும் சேர்ந்து மனப்பிரச்னைகளையும் உருவாக்கும். எனவே, மனமும் உடலும் குளுமையாக… ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம், பதற்றம், அதிக கோபம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவும் இந்தச் செம்பருத்திப்பூ பானம். இது கோபத்தைத் தூண்டும் ஹார்மோனைச் சமன் செய்யும். இதயத்துடிப்பைச் சீராக்கும். இதில் இரும்புச்சத்து மிகுந்து காணப்படுவதால் இதயத்துக்கு வலுவூட்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்.
என்ன தேவை?
- சுத்தம் செய்த ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூ இதழ்கள் – 15
- பாதாம் பிசின் – ஒரு டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். முதல் நாளே ஊறவைக்கவும்)
- நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன்
- எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்)
- தண்ணீர் – 500 மில்லி.
எப்படிச் செய்வது?
செம்பருத்திப்பூ இதழ்களுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் இறக்கவும். அதனுடன் நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும். ஆறியதும் வடிகட்டவும். அதனுடன் பாதாம் பிசின் சேர்த்துக் கலந்து பருகவும்.