ஹிஸ்புல்லா இயக்க தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இன்று (செப்டம்பர் 28) அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நாடும், லெபனானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கமும் தொடர்ந்து, போரிட்டு வருகின்றன. இஸ்ரேல் பல வழிகளில் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. விரைவில் தரைப்படை வீரர்களை கொண்டு லெபனான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தங்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐ.நா. அமைப்பிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 27) இரவு தெற்கு பெய்ரூட் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அவர் பதுங்கியிருந்த பங்கர் மீது 80 டன் வெடிகுண்டுகளை வீசி இஸ்ரேல் அழித்ததாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இனிமேலும் உலகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட ஹசன் நஸ்ரல்லா உயிருடன் இல்லை. கடந்த 32 ஆண்டுகளாக இஸ்ரேல் மக்கள், ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் உலகத்தை விட்டு அகற்றப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ஏ.ஐ.பி நிறுவனமும் கூறியுள்ளது.
தற்போது 64 வயதான நஸ்ரல்லா லெபானான் நாட்டில் நல்ல செல்வாக்குள்ளவர். ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கியமான முடிவுகளை இவர்தான் எடுப்பார். உலகின் பல பகுதிகளில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கும் இவர் காரணமென்று இஸ்ரேல் கூறி வந்தது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இவரின் மகள் சைனப் என்பவரும் பலியானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், மீண்டும் அவர் உயிருடன் வந்தார். அதனால், இப்போது இஸ்ரேல் அறிவிப்பில் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குடை எடுத்துட்டுப் போக மறந்துடாதீங்க மக்களே… கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை!