‘இளைஞர்களை வழிநடத்த… தமிழகத்தில் மாற்றம் காண… அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்’ என்ற போஸ்டரைப் பார்த்ததிலிருந்தே டிஜிட்டல் இந்தியாவில் மிகப்பெரிய விவாதம் உருவாகியிருக்கிறது. சமூக ஊடகங்களைத் தாண்டி பொதுமக்களிடம் பாய்வதற்கு முன்பு ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் களம் என்னவென்று அறிய முற்பட்டபோது கிடைத்த தகவல்கள் ஆச்சரியம் அளிப்பவையாக இருக்கின்றன.
அரசியலில் ஈடுபட பொது சேவை செய்யும் மனது இருந்தால் போதும் என்ற நிலை மாறிவிட்டது. ஒருவரது அரசியல் கொள்கை என்னவென்பதைவிட, அரசியல் செய்ய பணம் யாரிடமிருந்து வருகிறது என்பதைத்தான் அரசாங்கம் தேடுகிறது. அது அரசியல்வாதிகளின் மீதான கிடுக்குப்பிடியாக ஒருநாள் மாறக்கூடும் என்பதால் இந்தத் தகவலை முதலில் எடுக்கிறார்கள். கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறார் என்ற தகவலுக்கு முன்பாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பல ஆண்டுகளுக்கு பணியாற்றுவதாக ஒப்பந்தமாகி பல கோடிகளை கமல்ஹாசன் பெற்றார் என்றும், ஆம் ஆத்மி கட்சியின் வழியில் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறப்படுகிறது என்ற தகவல்கள் தான் முதலில் வந்தன. அதுபோலவே, ஆர்.ஜே.பாலாஜியின் தற்போதைய பயணத்தை பின்னாலிருந்து ஆதரவளித்து தொடங்கிவைத்திருப்பது சென்னையிலுள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் உரிமையாளரான ஐசரி கணேஷ் அவர்கள்.
ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி திரைப்படத்தில் நடித்ததிலிருந்து ஆர்.ஜே.பாலாஜிக்கும், ஐசரி கணேஷுக்குமான உறவு தொடங்குகிறது. தேவி திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அந்த பழக்கம் நட்பாக மாறி. கடந்த வருடம் நடைபெற்ற வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆர்.ஜே.பாலாஜி சிறப்பித்தார். அப்போது மேலும் நெருங்கிய இவர்களது நட்பு ஒரு கட்டத்தில் கூட்டணியாக மாறியிருக்கிறது என்கின்றனர் பல்கலைக்கழகத்துக்கு நெருக்கமானவர்கள்.
சென்னை அண்ணாசாலையிலுள்ள சி.ஐ.டி நகர் வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்திலிருந்து தான் ஆர்.ஜே.பாலாஜியின் மே 18ஆம் தேதி அறிவிப்புக்கான பணிகள் அத்தனையும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. அங்கு மேனேஜராக இருக்கும் மயில்வாகனன் என்பவர் அத்தனை பண விவகாரங்களையும் கையிலெடுத்து நடத்தி வருகிறார்.
மே 18 ஆம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் அறிவிப்பு விழா நடைபெறுகிறதா என விசாரித்தபோது, அன்றைய நாளில் International Conference on Emerging Trends in Engineering Research (ICETER’18) எனும் விழா வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. தாய்லாந்தில் நடைபெறும் இந்நிகழ்வை காணொளி மூலமாக வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் ஒளிபரப்புகிறார்கள்.எனவே, ஆர்.ஜே.பாலாஜியின் அறிவிப்பு விழா எங்கு நடைபெறும் என்பது தங்களுக்கே சந்தேகமாக இருப்பதாகக் கூறுகின்றனர் கல்லூரியில் பணிபுரிபவர்கள். ஆர்.ஜே.பாலாஜிக்காக வரையப்பட்டிருக்கும் சுவர் விளம்பரங்கள் சென்னையின் 7 இடங்களில் வரையப்பட்டிருக்கின்றன. நுங்கம்பாக்கம்,, மேத்தா நகர், பாண்டி பஜார், வடபழனி, கீழ்பாக்கம், அண்ணா நகர் ஆகிய கல்லூரிகள் அதிகமிருக்கும் இடங்களில் இந்த விளம்பரங்கள் வரையப்பட்டிருக்கின்றன.
மே 18ஆம் தேதியன்று எந்த சமூக வலைதளத்திலிருந்து ஆர்.ஜே.பாலாஜி அதிகளவில் மக்களிடம் சென்றடைந்தாரோ. அதே ட்விட்டர் ஃபேஸ்புக்கில் தான் இந்த அறிவிப்பையும் வெளியிடுகிறார். அந்த அறிவிப்பு வேறு ஒன்றும் இல்லை. ஐசரி கணேஷ் தயாரிப்பில், புதிய படம் ஒன்றில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோ கேரக்டரில் நடிக்கிறார். அதற்கும் தற்போது வெளியிட்டிருக்கும் கொடிக்கும் என்ன தொடர்பு என்று விசாரித்தபோது, கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘Humble Politician Nograj’ என்ற திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜிக்காக ஐசரி கணேஷ் ரீமேக் செய்கிறார். அரசியல்-காமெடி நிறைந்த திரைப்படமான அதற்கு ஒரு பரபரப்பு புரமோஷன் செய்வதற்காக வேண்டுமென்றே கொடியை மட்டும் ரிலீஸ் செய்திருக்கின்றனர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் படக்குழுவினர்.