இந்தியாவின் 2025-26 பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) நேற்று தாக்கலானது. இதில் நாட்டின் வளர்ச்சி, பணவீக்கம் (Inflation), வேலைவாய்ப்பு (Employment), விவசாயம், பசுமை ஆற்றல் மற்றும் டிஜிட்டல் யுகத்தின் சவால்கள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் விளக்கியுள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதற்கு உலகளாவிய காரணங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும், இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் சந்தையாக இருப்பதால் உலகளாவிய ஆபத்து உணர்வு மற்றும் நிலையற்ற மூலதனப் பாய்ச்சல்களால் இந்தியா பாதிக்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதாகவும், நாணயத்தின் ஏற்ற இறக்கங்கள் பெரும்பாலும் உலகளாவிய நிதி நிலைமைகள் இறுக்கமடைவதைப் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுப்பெற்றுள்ளது. பணவீக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. 2025-26 நிதியாண்டில் நுகர்வோர் செலவினம் மற்றும் முதலீடு அதிகரித்ததன் காரணமாக, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும், 2025-26 நிதியாண்டின் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் 1.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அரசு நிதிகள் சீராக முன்னேறி வருகின்றன. ஆதரவுடன் அரசு நிதிகள் மேம்பட்டு வருகின்றன. 2025-26 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை என்பது அரசுக்கு வரும் வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும் நிலையைக் குறிக்கும். முதன்மைப் பற்றாக்குறையும் குறைந்துள்ளது. முதன்மைப் பற்றாக்குறை என்பது வட்டி செலுத்துவதைத் தவிர்த்து அரசுக்கு ஏற்படும் பற்றாக்குறையாகும். இது, பொருளாதாரத்தை பாதிக்காமல் செலவினங்களை நிர்வகிக்க அரசுக்கு அதிக சுதந்திரம் அளிக்கிறது.
வேலைவாய்ப்பு சந்தையில் தெளிவான முன்னேற்றம் காணப்படுகிறது. வேலையின்மை விகிதம் 2017-18ஆம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்த நிலையில் அது 2023-24ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 23.3 சதவீதத்தில் இருந்து 41.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்பது வேலை செய்யும் வயதில் உள்ள பெண்களில் வேலை செய்பவர்களின் சதவீதமாகும். சமீபத்திய 2025-26 நிதியாண்டின் டிசம்பர் வரையிலான தரவுகளின்படி, வேலையின்மை விகிதம் மேலும் 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை சீரான வளர்ச்சியையும், பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றத்தையும் காட்டும் ஒரு பொருளாதாரப் படத்தை அளிக்கிறது. ஆனால், விவசாயத் தடைகள், பசுமை ஆற்றல் தளவாடங்கள் மற்றும் AI-யால் ஏற்படும் இடையூறுகள் போன்ற தெளிவான எச்சரிக்கை அறிகுறிகளையும் இது சுட்டிக்காட்டுகிறது. இந்த சவால்களை நிர்வகிப்பதே எதிர்கால வளர்ச்சியைத் தக்கவைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளார்.
