சித்ரா மரணத்தில் இரு முன்னாள் அமைச்சர்கள்: நீதிமன்றத்தில் கணவர் ஹேம்நாத்

தமிழகம்

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில், ஹேம்நாத்திற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

சின்னத்திரை நடிகை சித்ரா, 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். சித்ராவின் தற்கொலை தொடர்பாக, அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தன் மீதான குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக்கோரி ஹேம்நாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை விசாரணைக்கு தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த ஜூன் 13ம் தேதி நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக சித்ராவின் தந்தை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி ஜூலை 4ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்த பதில் மனுவில், ”ஹேம்நாத்திற்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன. ஹேம்நாத் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் செய்த சித்ரவதை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்துகொண்டார். ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 2) நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேம்நாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சித்ரா குடும்பத்தில் அவர் மட்டுமே சம்பாதிக்கக்கூடிய நபராக இருந்தார். சித்ராவின் வருமானத்தை நம்பித்தான் தங்களுடைய குடும்பம் இருப்பதாக அவரது தாயாரே பலமுறை கூறியிருக்கிறார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஹேம்நாத்துக்கும் சித்ராவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

வரதட்சணை கேட்டு ஹேம்நாத் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. சித்ராவை தாக்கியதாக சொன்னதெல்லாம் தவறு. சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டார். ஹேம்நாத் கொலை செய்யவில்லை” என வாதத்தை வைத்தார்.

மேலும், சித்ராவின் மரண விஷயத்தில் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், ஆனால், அதுகுறித்த விவரங்கள் தமக்குத் தெரியாது எனவும் ஹேம்நாத் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

ஹேம்நாத் தரப்பு வாதம்

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சதீஷ்குமார், “எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள்” என கேள்வி எழுப்பினார். அதற்கு ஹேம்நாத் தரப்பு, “அவர்களுக்கு தொடர்பில்லை என்றால் ஏன், தம்மைச் சிக்கவைக்க வேண்டும்?” என ஒரு கேள்வியை முன்வைத்தனர். மேலும், “சித்ராவின் கணவர் என்பதற்காகத்தான் தம்மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட இடத்தில் என்ன நடந்தது என தனக்குத் தெரியாது” எனவும் ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், சித்ரா மரணம் தொடர்பான வழக்கில், ஹேம்நாத்திற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஹேம்நாத் எதிர்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்

நெல் பூக்க , கல் பூக்க , வில் பூக்க…பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள்!

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published.