ஜார்க்கண்டில் இன்று (நவம்பர் 28) நடைபெற இருக்கும் ஹேமந்த் சோரனின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 என இரண்டு கட்டமாக நடந்துமுடிந்தது. இந்த தேர்தலில் ஹேமந்த் சோரனின் ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா’ தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கும் பலத்த போட்டி நிலவியது.
தேர்தல் முடிவுகள் நவம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில் 42-இல் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கமுடியும் என்றிருந்த நிலையில், 56 தொகுதிகளில் வெற்றிபெற்ற ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. இவர்களுக்கு எதிராகப் போட்டியிட்ட என்.டி.ஏ. கூட்டணியால் 24 தொகுதிகளில் தான் வெற்றிபெற முடிந்தது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 28) மாலை 4 மணிக்கு, ஜார்க்கண்ட் தலைநகரம் ராஞ்சியில் உள்ள மொரபதி மைதானத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில், ஹேமந்த் சோரன் நான்காவது முறையாக ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பக்வத் சிங் மன், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஜார்க்கண்டிற்கு கிளம்பிச் சென்றார். பதவியேற்பு விழா முடிவடைந்ததும் இன்று இரவே உதயநிதி சென்னை திரும்புகிறார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“ஸ்டாலினைப் போல் அரசியல் ஞான ஒளி எனக்கில்லை” – ராமதாஸ் பதிலடி!