கிளாம்பாக்கத்துக்கு மாற மறுக்கும் ஆம்னி பேருந்துகள்… போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கோயம்பேடு!

Published On:

| By Kavi

தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற வேண்டுமென்ற அரசின் உத்தரவை மறுப்பதால் கோயம்பேட்டில் இரவு நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.

ஆம்னி பேருந்துகள் மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரும் அரசு பேருந்துகளால் சிட்டிக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது.

கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் 2023ஆம் ஆண்டு திறந்து வைத்தார். அங்கு ஆம்னி பேருந்துகளுக்கும் தனியே கவுண்ட்டர்கள் உள்ளன.

எனினும் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தும், அந்த பேருந்துகளின் அலுவலகம் உள்ள இடங்களில் இருந்தும் மட்டுமே இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

ஆம்னி பேருந்துகள் சிட்டிக்குள் இயக்கப்படுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. பயணிகளின் வசதிக்காக சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்துகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்த வழக்கில் கோயம்பேட்டில் தனியார் டிப்போக்கள் மற்றும் கேரேஜ்கள் உள்ள ஆப்ரேட்டர்கள் மட்டுமே அங்கு தொடர்ந்து செயல்பட அனுமதியளிக்கப்பட்டது. இருப்பினும், டிப்போக்கள் அல்லது கேரேஜ்கள் இல்லாத 800க்கும் மேற்பட்ட பேருந்துகள் சாலையோரங்களில் நிறுத்தி பயணிகளை வெளிப்படையாக ஏற்றிச் செல்கின்றன.

ADVERTISEMENT

திருச்சி மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் 100 அடி சாலையிலும், கோயம்பேடு மேம்பாலத்தின் கீழும், சாஃப் கேம்ஸ் வில்லேஜ் , மெட்ரோ ரயில் நிலையத்தின் கீழும் நிறுத்தப்படுகின்றன. இதனால் வார இறுதி நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் போக்குவரத்து நெரிசல் மோசமடைகிறது.

இதுகுறித்து முகப்பேர் பன்னீர் நகரைச் சேர்ந்த ராமன் TOI-யிடம் கூறுகையில், “சாலைகள் ஓரத்தில் பேருந்துகளை வரிசைகட்டி நிறுத்திவைக்கிறார்கள். விஜயகாந்த் நினைவிடத்திற்கு எதிரே உள்ள வெளியேறும் இடத்தில் தனியார் பேருந்துகள் நிற்கின்றன. கார்கள், பைக்குகள் எல்லாம் இந்த பகுதியில் ஒன்று சேர்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. கோயம்பேடு மேம்பாலத்தை கடக்கவே 20 நிமிடங்கள் ஆகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரு செல்லும் பேருந்துகளாலும் இதே நிலைமைதான். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு தாமதம் ஆவதால், சுமார் 300 பேருந்துகள் மதுரவாயல் வரை 5 கி.மீ தூரத்திற்கு வரிசையாக நிற்கின்றன. இதனால் வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தகவல்படி, மேற்கு,மத்திய, தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 1,100 பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் 70% க்கும் அதிகமான பேருந்துகள் இன்னும் கோயம்பேடுக்கு வெளியே இருந்துதான் இயக்கப்படுகின்றன.

அச்சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறுகையில், ‘பயணிகள் தங்களின் வசதிக்காக இங்கிருந்துதான் டிக்கெட் புக் செய்கிறார்கள். கிளாம்பாக்கத்துக்கு செல்ல சரியான போக்குவரத்து இணைப்பு வசதி இல்லை. ஆம்னி பேருந்துகளும் நகரத்துக்குள் வந்து செல்ல இரண்டு மணி நேரம் ஆகிறது. மெட்ரோ அல்லது ரயில் வசதி இருந்தால், மக்கள் அங்கே புக் செய்வார்கள். நாங்களும் அங்கே மாறுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

நகரத்துக்குள் அசோக் நகர், கிண்டி, ஆலந்தூர் கோர்ட், வேளச்சேரி என 100க்கும் அதிகமான பாய்ண்டுகளில் பயணிகளை ஆம்னி பேருந்துகள் ஏற்றிச் செல்கின்றன. நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுவதால் இவற்றை கட்டுப்படுத்துவது கடினம் என்று போக்குவரத்து போலீசாரும் கூறுகின்றனர். அதாவது முக்கிய நேரங்களில் பேருந்துகளை நிறுத்தினால் அது பிரச்சினையாகிவிடும் என்கின்றனர்.

சிம்டிஏ அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், கோயம்பேட்டில் கேரேஜ் வைத்திருப்பவர்கள் உட்பட அனைத்து ஆம்னி பேருந்துகளை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் ஒரு சட்டப்பூர்வ தீர்வை நாடுகிறது. விரைவில் தீர்வு காண்போம்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share