சென்னையில் நேற்று (ஜூன் 18) இரவு பெய்த கனமழையால் 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
சென்னையில் கனமழை
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் நேற்று (ஜூன் 18) இரவு 9.30 மணியளவில் தொடங்கிய மழை மெல்ல மெல்ல அதிகரித்து அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், நந்தனம், அண்ணாநகர், வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையாக பெய்தது.
அதேபோல், சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் நேற்று பெய்த கனமழையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ., மீனம்பாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
விமான சேவை பாதிப்பு
சென்னையில் நேற்று இரவு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டன.
அதில் கேரள மாநிலம் கோழிக்கோடில் இருந்து 70 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லியில் இருந்து 158 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகியவை கனமழையால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமிட்டன.
இதையடுத்து, கோழிக்கோடு விமானம் திருச்சிக்கும், டெல்லி விமானம் பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், மதுரை, மும்பை, கோவை, டெல்லி, ஹைதராபாத், கோவா, வாரணாசி உள்ளிட்ட 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமிட்டன.
பின்பு, காற்றின் வேகம் குறைந்த பின்பு, விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய துபாய், குவைத், சிங்கப்பூர், பாங்காக், டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், கோலாலம்பூர், அபுதாபி உள்ளிட்ட 14 விமானங்கள் இடி, மின்னல், காற்றின் வேகம் குறைந்த பின்பு தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றன.
சென்னையில் பெய்த கனமழையால் மொத்தமாக 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால், விமான நிலைய பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வள்ளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களிலும் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நூர்மி தடகள போட்டி : தங்கம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தல்!
முதல்வர் இல்லாமல் இயங்கும் 60 அரசு கல்லூரிகள் : ராமதாஸ் குற்றச்சாட்டு!