கடந்த புதன்கிழமை வரை அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் இயல்பை விட 272 மிமீ கூடுதல் மழை பெய்துள்ளது. ஆகையால் இந்த இரு மாநிலங்களுக்கும் இந்த வார இறுதி வரை ரெட் அலர்ட் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அசாமில் வெள்ள நிலைமை மோசமடைந்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவைத் தூண்டும் இடைவிடாத மழைக்கு மத்தியில், முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அசாமில் 25 மாவட்டங்களில் குறைந்தது 11 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட பஜாலி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் கௌரங்கா நதிகளின் நீர்மட்டம் பல பகுதிகளில் அபாய அளவை தாண்டியுள்ளது. அங்கு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 19782.80 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் சுமார் 1,510 கிராமங்கள் தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கவுகாத்தியில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தண்ணீர் தேங்கியுள்ளதால் நகரமே ஸ்தம்பித்துள்ளது. மேலும் குவஹாத்தி நகரிலும் பல நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. பக்சா மாவட்டத்தில், இடைவிடாத மழை மற்றும் திஹிங் ஆற்றின் நீர்மட்டம் உயர்வு காரணமாக சுபன்காட்டா பகுதியில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
அசாம் மாநிலத்தில் பல தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதைத் தொடர்ந்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கம்ரூப் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
