கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் கன முதல் மிக கன மழையும் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று உத்தரவிட்டுள்ளார். அதேபோல காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவித்துக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் டானி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு முதல் நகரின் பல பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிச. 2-ல் துவங்கும் ‘Pro Kabaddi 10’: தமிழ் தலைவாஸ் அட்டவணை இதோ!