தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. heavy rain in tamilnadu on 16-11-2023
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் நவம்பர் 22 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 8.30 மணி அளவில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கே, ஒடிசாவிலிருந்து சுமார் 320 கிலோ மீட்டர் தென்-தென்கிழக்கே, மேற்கு வங்கத்திலிருந்து சுமார் 460 கிலோ மீட்டர் தென்-தென்மேற்கே, வங்கதேசத்திலிருந்து சுமார் 610 கிலோ மீட்டர் தென்-தென்மேற்கே நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, 18ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையை மோங்க்லா – கேப்புபாராவிற்கு இடையே கடக்கக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
இன்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவம்பர் 19 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவம்பர் 20 ஆம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்
இன்று தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
இன்று வடமேற்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய வங்கக்கடல் பகுதிகள், ஒடிசா கடலோரப்பகுதிகள், மேற்கு வங்க மற்றும் அதை ஒட்டிய வங்கதேச கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை வடமேற்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மேற்கு வங்க மற்றும் அதை ஒட்டிய வங்கதேச கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஒடிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. heavy rain in tamilnadu on 16-11-2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா