ஊட்டியில் கனமழை… மண் சரிவு… மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published On:

| By Kavi

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சுமார் 20 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குன்னூர் பிடிஓ பகுதியில் அதிகபட்சமாக 26 செமீ மழையும் குன்னூரில் 21 செமீ மழையும் பெய்துள்ளது.

ADVERTISEMENT

கனமழை காரணமாக மலை பகுதியின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே உறைபனி காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காலநிலை மாறி திடீரென மழையும் பெய்துள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக குன்னூர் உழவர் சந்தை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள் சேதமடைந்தன.

மலை ரயில் செல்லும் வழியில் 5 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால், இன்று (ஜனவரி 2) மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது.

ADVERTISEMENT

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குறும்பாடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு மண் திட்டுகள் சாலையில் விழுந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த லாரி ஒன்று மண்சரிவில் சிக்கிக் கொண்டது.

பின்னர் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று இரவில் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூர்-கொலக்கெம்பை, சேலாஸ் செல்லும் சாலையில் 7 இடங்கள், குன்னூர்-ஊட்டி சாலையில் 4 இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டன.

கனமழை காரணமாக குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 

டிடிகே செல்லும் சாலையில் 60 அடி தடுப்புசுவர் இடிந்து விழுந்ததில் அங்கிருக்கும் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன.  தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

ஊட்டியில் மரம், மின்சார கம்பங்கள் சாய்ந்துள்ளதால் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share