தமிழகத்துக்கு மேல் நிலவும் கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது.
சென்னையில் அதிகாலை பெய்த மழை!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,
நகரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (ஆகஸ்ட் 28) தெரிவித்திருந்தது.

அதன்படி, நேற்று கிண்டி, கத்திப்பாரா, ஆலந்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது.
இந்நிலையில், சென்னையில் அதிகாலை முதலே நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, பல்லாவரம், மாம்பலம், எழும்பூர், புரசைவாக்கம்,
வண்டலூர், மயிலாப்பூர், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர், வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மழையில் நனைந்து கொண்டே மாணவர்கள் பள்ளிக்கு செல்வதையும், மக்கள் வேலைக்கு செல்வதையும் காண முடிகிறது.
சென்னையில் இரண்டாவது நாளாக விமானச் சேவை பாதித்துள்ளது. பல விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
சென்னை போன்று ஈரோடு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று இரவு தொடங்கிய கனமழை தற்போது வரை இடி மின்னலுடன் பெய்து வருகிறது.
பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

உள் நோயாளி பிரிவில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தூய்மை பணியாளர்கள் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்ந்து பெய்து வரும் மழையால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி அறிவித்தார்.

காவிரியில் வெள்ள எச்சரிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.20 லட்சமாக வந்து கொண்டிருக்கிறது.
இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் காவிரி ஆற்றில் இறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா