கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் சென்னையில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. heavy rain in chennai
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, சேலம், ஈரோடு, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதன்படி சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, சேப்பாக்கம், எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனை சமூகவலைதள வாசிகள் வீடியோவாக எடுத்து #ChennaiRains என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்து வருகின்றனர். இதனால் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
மழையின் காரணமாக சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுகிறது.
சென்னையில் பிற்பகல் ஒரு மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை போலவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. heavy rain in chennai