மழையின் காரணமாக சென்னையில் தரையிறங்க வேண்டிய ஏர் இந்தியா விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. Heavy rain in Chennai
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 16) காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது
கோடை மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அதே நேரம் காலை நேரத்தில் மழை பெய்ததால் அலுவலகங்களுக்கு செல்வோர் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் இருந்து 160 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ்,
கவுகாத்தியிலிருந்து 138 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ்,
பெங்களூருவில் இருந்து 125 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமானங்கள் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் நீண்ட நேரம் வட்டமடித்து பின் தரையிறங்கின.
அதுபோன்று மும்பையில் இருந்து 145 பயணிகளுடன் சென்னைக்கு வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
மேலும் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, மும்பை, கொச்சி ஆகிய பகுதிகளுக்கு புறப்படவிருந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திடீர் மழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். Heavy rain in Chennai
