தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. heavy rain in 7 districts
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி முதல் பெய்ய துவங்கிய மழை இன்று காலை 6 மணி வரை வெளுத்து வாங்கியது. அங்கு ஒரே இரவில் அதிகபட்சமாக 15 செமீ மழை பெய்துள்ளது.
கனமழையால் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று கூறியுள்ளது. heavy rain in 7 districts