புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களில் கனமழை!

Published On:

| By Monisha

heavy rain in 16 districts of tamilnadu

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 9) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவ கூடும்.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மற்றும் டிசம்பர் 11 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்றும் நாளையும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

அட்லியின் ’ஜவான்’ படத்திற்கு கிடைத்த ஹாலிவுட் கௌரவம்!

WPL Auction 2023: 5 அணிகள் குறித்த முக்கிய விவரங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share