வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால், சென்னையில் இன்று (அக்டோபர் 15) இரவு அதிகனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையை கடக்க கூடும்” என்று தெரிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “சென்னை கடற்கரைக்கு வெளியே கடுமையான மேகங்கள் ஒருங்கிணைந்து, தீவிரமடைந்து நகருக்குள் வர தயாராக உள்ளன. சென்னையில் கடந்த 6 மணி நேரத்தில் மட்டும் சில இடங்களில் 150 மி.மீட்டரை தாண்டி மழை பெய்துள்ளது.
குறிப்பாக, வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் நள்ளிரவு முதல் பெய்த மழையில் பல இடங்களில் 200 மிமீ-க்கு மேல் மழை பெய்துள்ளது. இன்று இரவு அதிகனமழை பெய்யும் என்று தெரிகிறது. போன் மற்றும் லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அப்பார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் மோட்டாரில் தண்ணீர் நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…