வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மேலும் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

Published On:

| By christopher

கனமழை எதிரொலியாக மேலும் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. தொடர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 2நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் எதிரொலியாக ஒருசில மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படும் என நேற்றே அறிவிக்கப்பட்டது.  தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என வழங்கப்பட்டது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக கோவையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று ஒருநாள் மதியம் வரை மட்டுமே இயங்கும் என அம்மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தற்போது அறிவித்துள்ளார்.

மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும், இந்த தேர்வுக்கான மாற்றுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் மு. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதே போன்று சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நேற்று தொடங்கப்பட்ட பி.எட். நேரடி கலந்தாய்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறுவதாக இருந்த தாவரவியல், விலங்கியல், வேதியியல் மற்றும் இயற்பியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மிரட்டும் கனமழை… ஒரேநாளில் எகிறிய காய்கறிகள் விலை!

பிக் பாஸ் சீசன் 8 : அடுத்த ரவீந்தர் ஆகும் முத்துக்குமரன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share