ADVERTISEMENT

20 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் : சென்னை நிலவரம்?

Published On:

| By Kavi

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 17ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், நெல்லை என பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 18) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நேற்று (17-10-2025 தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (18-10-2025) காலை 05.30 மணி அளவில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

ADVERTISEMENT

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக இன்று (18-10-2025), தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் என 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

19-10-2025: கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

20-10-2025: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21-10-2025: விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22-10-2025: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share