கனமழை எச்சரிக்கை எதிரொலியாக கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 27) விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு குறுஞ்செய்தி!
இதற்கிடையே நேற்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்களுக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அவர்களது செல்போன் எண்ணுக்கு கனமழை எச்சரிக்கையை குறுஞ்செய்தி விடுக்கப்பட்டுள்ளது.
அதில், ‘அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம், நாகப்பட்டிணம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து என அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா