தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் தங்களது வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இன்றும் நாளையும் (மார்ச் 24,25) இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Heavy heat officials instructs
இந்தநிலையில், கோடை வெயிலை சமாளிக்க அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு குடிநீர், மோர் வழங்க போக்குவரத்து கழக கிளை மேலாளர்களுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி, “தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால் பஸ் நிலையங்கள், நேர கண்காணிப்பாளர் அறைகள், ஓய்வறைகள், உணவகம் உள்ளிட்ட இடங்களில் போதுமான குடிநீர் மற்றும் மோர் ஆகியவை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஓ.ஆர்.எஸ் பொட்டலங்கள் வழங்கி நீர்ச்சத்து குறையும் போது அருந்த அறிவுறுத்த வேண்டும்.
ஓட்டுநர், நடத்துநர்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க அறிவுறுத்த வேண்டும். ஆர்.ஓ இயந்திரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். உடல்நலக்கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
தலையில் தொப்பி அணிய வேண்டும். பேருந்துகளில் முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும். பேருந்தில் உள்ள ரேடியேட்டர் வெப்பத்தை பரிசோதித்து அதில் குறைகள் இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. Heavy heat officials instructs