தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து காணப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியிலேயே கடுமையான வெயில் தாக்கம் ஆரம்பமாகி உள்ளது. இந்த ஆண்டில் வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதை சமாளிக்க அரசும் மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறிப்பாக, பிப்ரவரி 20 அன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு பின்பு, பிப்ரவரி 21, 22, 23 தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகளில் வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வானிலை நிலை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லையாம்
வானிலை மாற்றத்தால் மீனவர்களுக்கு எந்தவிதமான எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை. இருந்தபோதிலும், கடலில் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டுமென வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்:வெப்பநிலை உயர்வு காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீர் குடித்து உடலின் ஈரப்பதத்தை பராமரிக்கவும், வெளிநடப்பு குறைக்கவும், அதிக சூரிய வெப்பம் இருக்கும் நேரங்களில் வெளியில் செல்லாமல் இருப்பதையும் வானிலை ஆய்வு மையம் பரிந்துரைத்துள்ளது.கடந்த சில ஆண்டுகளின் அனுபவத்தைப் பார்க்கும்போது, இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடிய சூழல் நிலவுவதால், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.