அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?… பிடிஆர் – அண்ணாமலை மோதல்!

Published On:

| By Minnambalam

தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கையை சிறப்பாக பின்பற்றும் போது திடீரென மும்மொழிக் கொள்கைக்கு மாற வேண்டும் என்றால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்று ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 12) பேசியதற்கு அண்ணாமலை எதிர்வினையாற்றியுள்ளார். Heated debate on three language

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதுரை கல்லூரி மைதான வளாகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பழனிவேல் தியாகராஜன், “தேசிய கல்விக் கொள்கை முதல்முறையாக 1968-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையை 57 ஆண்டுகளாகியும் முறையாக அமல்படுத்த முடியவில்லை.

இருக்கின்ற நிதியை வைத்து எப்படி சிறப்பான கல்வியை வழங்குவது என்பதே மாநில அரசின் இலக்காக உள்ளது. தேசிய அளவில் பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது இருமொழிக்கொள்கையால் தமிழ்நாடு சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது.

ADVERTISEMENT

வடமாநிலங்களில் இருமொழிகொள்கையை முறையாக பின்பற்றி இருந்திருந்தால் மும்மொழி கொள்கை பிரச்சனை வந்திருக்காது. மும்மொழிக் கொள்கையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் திடீரென நான் சொல்வதை அமல்படுத்த வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கையை சிறப்பாக பின்பற்றும் போது திடீரென மும்மொழிக் கொள்கைக்கு மாற வேண்டும் என்றால் அறிவுள்ளவர்கள் யாராவது ஏற்றுக்கொள்வார்களா? சில மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கையை கூட நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு அளவிற்கு கல்வியை பிற மாநிலங்களில் உயர்த்த முடியாததால், அவர்கள் அளவிற்கு எங்களை கல்வியில் குறைக்க முயற்சிக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. சக்சஸான மாடலை எடுத்துவிட்டு ஃபெயிலியரான மாடலை பின்பற்ற வேண்டும் என்று சொன்னால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையே இந்தி தெரியாது என்று சொல்கிறார். அதனால் ஏதாவது பிரச்சனை வந்ததா? அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில், தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்ககூடிய பள்ளியில் தான் படிக்கிறார். அதனால் பிடிஆருக்கு தானே அறிவில்லை என்று அர்த்தம். அவரது மகன் இந்திய குடிமகனா? அல்லது அமெரிக்க குடிமகனா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். ஏதாவது ஒரு திமுக எம்.எல்.ஏ அல்லது எம்.பி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி என்னுடைய மகன் அல்லது மகள் இரு மொழி பள்ளியில் படிக்கிறார் என்று சொல்ல முடியுமா? அவர்களுக்கு ஒரு நியாயம். பொதுமக்களுக்கு ஒரு நியாயமா?

அதனால் தான் அரசு பள்ளியில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களுக்கும் தனியார் பள்ளியில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களுக்கு சம கல்வி கிடைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. தமிழகத்தின் பள்ளி கல்வித்துறையில் கற்றல் திறன், கற்றல் அறிவியல் திறன் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் தமிழ் மொழியை விட ஆங்கில மீடியத்தில் தான் அதிகமாக படிக்கிறார்கள். இதனால் தமிழ் மீடியம் 27 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால், தேசிய கல்வி கொள்கையில் தமிழ் மொழியை ஊக்குவிக்கிறோம். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இதுபற்றி சிந்திக்காதது ஏன்?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share