“அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா… எதார்த்தம் என்ன?” : சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று (ஜனவரி 22) ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினரிடையே காரசார விவாதம் நடைபெற்றது. 

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். 

ADVERTISEMENT

அப்போது 100 நாள் வேலை திட்டம் தொடர்பாகவும், ஓய்வூதிய திட்டம் தொடர்பாகவும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பிய நிலையில், இது தொடர்பாக நீண்ட விவாதம் நடைபெற்றது. 

“100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. ஆனால் அத்திட்டமே இல்லாமல் போய்விடும் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது” என கூறினார். 

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “இந்தத் திட்டத்துக்கு நூறு சதவிகிதம் நிதி வழங்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு அதனை 60 சதவிகிதமாக குறைத்து இருக்கிறது. இந்த திட்டத்தையே நிறுத்த முயற்சிக்கிறது. 125 நாட்கள் கொடுப்போம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. அவர்கள் கூட்டணியில் இருந்து கொண்டு இதற்கெல்லாம் நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள்” என்று பதிலளித்தார். 

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘ 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியுள்ளது அதைத்தான் நாங்கள் வரவேற்றுள்ளோம். இத்திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என்று நாங்களும் வலியுறுத்தி இருக்கிறோம்” என்று கூறினார்.

ADVERTISEMENT

இதற்கு அமைச்சர் ஐ பெரியசாமி, “திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் தான் இத்திட்டமே தொடங்கப்பட்டது. காந்தியின் பெயரை மாற்றுவது ஏன்? ஜி ராம்ஜி எல்லாம் இங்கு வேலைக்கு ஆகாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், உங்கள் கூட்டணியில் இருக்கும் பாஜகதானே மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. நீங்கள் குரல் கொடுக்கலாமே. இத்திட்டம் தொடர்பாக பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது ‘ என்றார். 

இதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘ நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பித்தானே மக்கள் வாக்களித்தார்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது உங்களின் கடமை. எந்த அடிப்படையில் வாக்குறுதியை கொடுத்தீர்கள். இது தந்திரமான அறிக்கை தானே ‘ என்று கேள்வி எழுப்பினார். மேலும், உங்களுக்கு 39 எம்பிக்கள் உள்ளனர். ஒரு நாளாவது அழுத்தம் கொடுத்து அவையை உங்களால் ஒத்தி வைக்க முடிந்ததா. காவிரி பிரச்சனைக்காக நாங்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க அழுத்தம் கொடுத்தோம் ‘ என்று கூற, 

இதற்கு அமைச்சர் ரகுபதி, “மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கப்பட்டது. அதிலிருந்து காப்பாற்றுவதற்காகவே அதிமுகவினர் அவையை முடக்கினர் ‘ என்றார். 

அப்போது திமுக எம்எல்ஏ சுந்தர், “பிரதமர் மோடி நாளை தமிழ்நாட்டுக்கு வர உள்ளார். அவருக்கு அருகில் தான் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருப்பார். அவரால் முடிந்தால் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். 

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, “எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்த பிறகு இந்த திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்” என்று குறிப்பிட்டார். 

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்ற அதிமுகவினரின் குற்றச்சாட்டுக்கு, தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு பதிலளித்தார். 

“அதிமுக ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளில் மோனோ ரயில் திட்டம், இலவச செல்ஃபோன், ஆதரவற்ற இல்லங்கள், வீடு இல்லாதவர்களுக்கு 3 சென்ட் நிலம், பழைய ஓய்வூதிய திட்டம் என எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 

அதேசமயம் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் 90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொல்லாததையும்  நிறைவேற்றியுள்ளோம். திமுக ஆட்சியை மக்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு பாராட்ட மனமில்லை ‘ என்று கூறினார். 

தொடர்ந்து ஓய்வூதியம் திட்டம் குறித்து அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பினார். 

நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழகமே போராட்டக் களமாக மாறி உள்ளது . அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு அரசு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

அப்போது எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று சொன்னீர்கள். ஆனால் அரசு ஊழியர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற வில்லை. மாறாக மத்திய அரசு அறிவித்ததில் சில மாற்றங்களை செய்து நீங்கள் அறிவித்திருக்கிறீர்கள்” என்றார். 

இதற்கு முதல்வர் ஸ்டாலின், “23 ஆண்டுகால அரசு ஊழியர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கிறோம். இதனால் கோட்டைக்கே வந்து இனிப்பு ஊட்டி அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்” என்றார். 

இதற்கு எடப்பாடி பழனிசாமி, “உங்களுக்கு சாதகமான சங்கம் தான்  இனிப்பு ஊட்டியது. எல்லா சங்கத்தினரும் இல்லை. பல சங்கங்கள் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதற்கான ரிசல்ட் தேர்தலில் தெரியும்” என்றார். 

இதற்கு அமைச்சர் வேலு, ”பழைய ஓய்வூதிய திட்டத்தை உள்ளடக்கியதுதான் தற்போதைய திட்டம். அனைத்து அரசு ஊழியர்களும் இதை ஏற்றுக்கொண்டு முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தேதி கேட்டுள்ளனர்” என்று கூறினார். 

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி,  ‘ பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அரசு ஊழியர்களின் கோரிக்கை. ஆனால் நீங்கள் பங்களிப்புடன் கூடிய திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறீர்கள். அதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு சில சங்கங்கள்தான் உங்களை ஆதரிக்கின்றன. இதுதான் எதார்த்தமான உண்மை” என்று பதிலளித்தார். 

இவ்வாறு சட்டமன்றத்தில் இன்று காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share