அதிகரிக்கும் வெப்பம்… தள்ளிப்போகிறதா தேர்தல்? – ஆலோசனையில் தேர்தல் ஆணையம்!

Published On:

| By Selvam

நாடு முழுவதும் வெப்ப அலை வீசும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (ஏப்ரல் 22) ஆலோசனை மேற்கொண்டார்.

18-வது மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 தொடங்கியது. ஜூன் 1 வரை தேர்தல் நடைபெற உள்ளது.

அந்தவவையில், தமிழகம், ராஜஸ்தான், அருணாச்சல் பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 65.5 சதவிகித வாக்குகள் பதிவானது. கடந்த தேர்தலில் 70 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், 4.5 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 2019 தேர்தலில் 72.4 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், 2024 தேர்தலில் 69.72 வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால், வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்ததாக, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக, அடுத்த சில நாட்களுக்கு இந்தியா முழுவதும் வெப்பநிலை அலை வீசக்கூடும், 37 – 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வெப்ப அலையில் இருந்து மக்களை பாதுகாத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையுடன் தேர்தலை நடத்துவது தொடர்பாக, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் வானிலை ஆய்வு மையம், பேரிடர் மேலாண்மை, சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது தேர்தல் முடியும் வரை வெப்பநிலை எப்படி இருக்கும் என்று பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன் மூலமாக தேர்தல் ஆணையரிடம் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் விளக்கினர்.

மேலும், வாக்குப்பதிவு மையங்களில் வெப்பத்தை தணிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள், வெப்ப அலைகளால் ஏற்படும் அபாயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹீரோவாக அறிமுகமாகும் சீரியல் நடிகர்… ஹீரோயின் யார் தெரியுமா…?!

ரூ.4 கோடி பறிமுதல்… “நயினார் வழக்கை விசாரிக்க முடியாது”: உயர்நீதிமன்றத்தில் ED!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share