தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 40.0° செல்சியஸுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைகாலம் தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் தேவையின்றி பகல் 12 மணிக்கு மேல் 3 மணிக்குள் வெளியே வரவேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மே 4ஆம் தேதி வரை வறண்ட வானிலைதான் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 3° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது.
கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை 8 இடங்களில் 40.0° செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளது.
ஈரோட்டில் 42.4° செல்சியஸ், சேலத்தில் 41.9° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ், தர்மபுரியில் 41.0° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.5° செல்சியஸ், திருத்தணியில் 40.2° செல்சியஸ், வேலூரில் 40.1° செல்சியஸ் மற்றும் நாமக்கல்லில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 36.7° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்” என்று தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நீலகிரி ஸ்ட்ராங் ரூம்… 26 நிமிட ஃபுட்டேஜ் இல்லை: கலெக்டர் ஷாக் தகவல்!