தமிழகம் முழுவதும் இன்று 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகவேகமாகப் பரவி வரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உள்பட 4,231 பேருக்கு இன்று (ஜூலை 9) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1, 26,581 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 65 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 42,369 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை 14,91, 783 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 3,994 பேர் இன்றைய தினம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 78,161 பேர் பூரண நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 46, 652 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு சமீப நாட்களில் குறைய ஆரம்பித்துள்ளது. நாள்தோறும் 2 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு இன்று 1,216 ஆக குறைந்துள்ளது. சென்னையின் ஒட்டுமொத்த பாதிப்பு 21, 778 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் 364, விருதுநகரில் 289, கள்ளக்குறிச்சியில் 254, மதுரையில் 262, தூத்துக்குடியில் 396, திருநெல்வேலியில் 110 என பிற மாவட்டங்களிலும் கணிசமான அளவு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
**எழில்**�,