கொரோனாவுக்குத் தடுப்பூசி: நம்பிக்கை அளிக்கும் ஆக்ஸ்ஃபோர்டு!

Published On:

| By Balaji

கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை அனைத்தும் தற்போது சோதனை நிலையிலேயே இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது எனத் தகவல் வெளிவந்துள்ளது. AZD1222 என அழைக்கப்படும் இந்தத் தடுப்பூசி, மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. 1,077 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பக் கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட சோதனை முடிவுகளின்படி, இந்தத் தடுப்பூசி எந்தவிதமான தீவிரமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. மாறாக ஆன்டிபாடி மற்றும் டி-செல் நோய் எதிர்ப்பு மறுமொழிகளையும் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் ஆண்ட்ரூ பொல்லார்ட், “எங்கள் தடுப்பூசி மக்களை நீண்ட காலத்துக்குப் பாதுகாக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார். எனினும், SARS-CoV-2 (COVID-19) நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி திறம்பட பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு முன்னர் தங்களுக்குக் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி சிறிய பக்க விளைவுகளை அடிக்கடி ஏற்படுத்தியது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர், எனினும், பாராசிட்டமால் எடுத்துக்கொள்வதன் மூலம் தடுப்பூசியிலிருந்து கடுமையான பாதகமான நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் குறைக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தடுப்பு மருந்துகள் திறம்படப் பயன்பாட்டுக்கு வந்தால், அதை வாங்குவதற்குப் பல நாடுகளும் ஏற்கெனவே அஸ்ட்ராஜெனெகாவுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. கொரோனா தீவிரமாகப் பரவி வரும் சூழலில் லாப நோக்கில் செயல்பட மாட்டோம் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

10 கோடி தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. விரைவில் உலகின் பிற நாடுகளுக்கும் இந்தத் தடுப்பூசி ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகமெங்கும் 6 லட்சம் பேரை பலி கொண்டிருக்கும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட செய்தி, மக்களுக்கு பெரும் நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share