எண்ணெய், வனஸ்பதி, மைதா, இன்னபிற செயற்கைச் சுவையூட்டிகள் இல்லாமல் செய்யப்படும் இனிப்பு வகைகள் அபூர்வம். இந்த ராகி நட்ஸ் உருண்டையை மேற்குறிப்பிட்ட பொருள் எதுவுமில்லாமல் செய்யலாம். இது உடலுக்கு வலு அளித்து ஆரோக்கியம் கூட்டும் ஏராளமான உட்பொருள்கள் கொண்டது. ரிலாக்ஸ் டைமை இனிமையாக்கும் தன்மையுடையது.
**எப்படிச் செய்வது?**
ஒரு கப் ராகி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் தேவையான அளவு உப்பு, தண்ணீர்விட்டு மென்மையாகவும் சிறிதளவு கெட்டியாகவும் அடைதட்டும் பதத்துக்குப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். பின்பு, அதை உருண்டைகளாகப் பிடித்து விரல்களால் அடைதட்டிக்கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லைக் காயவிட்டு அடையைப் போட்டு, நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடு ஆறிய பிறகு கைகளால் சிறு துண்டுகளாக்கவும் (கொஞ்சம் சூடு இருக்க வேண்டும்). பின்பு மிக்ஸியில் முக்கால் கப் பொடித்த வெல்லம், அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், கால் கப் வேர்க்கடலை, செய்து வைத்த ராகி அடை அனைத்தையும் சேர்த்து ரவை பதத்துக்கு அரைக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து, ஒன்றிரண்டாகப் பொடித்த முந்திரிப்பருப்புகளைைச் சேர்த்து, கைகளில் நெய் தொட்டுக்கொண்டு உருண்டை பிடித்து, எள் தூவி அலங்கரித்துச் சாப்பிடக்கொடுக்கவும்.
பாதாம் பருப்பு சேர்த்தும் செய்யலாம். வறுத்த வேர்க்கடலையாக இருந்தாலும் அரைப்பதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை வறுத்துக்கொள்ள வேண்டும்.
**சிறப்பு**
புரதச்சத்து அதிகம் நிறைந்த இந்த உருண்டை உடலின் சீரான இயக்கத்துக்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதற்கும் உதவும். நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மையைத் தரும்.
�,