தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், சுகாதாரத் துறைச் செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடம் வகிக்கும் தமிழகத்தில், கொரோனா மெல்ல மெல்ல உச்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூன் 12) வெளியிட்ட அறிவிப்பில், “சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளராக இருந்துவந்த பீலா ராஜேஷ், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மறு அறிவிப்பு வரும் வரை வருவாய் ஆணையர் பதவியை அவர் கூடுதலாகக் கவனிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறைச் செயலாளராக 7 ஆண்டுகள் வரை பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, போக்குவரத்துத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சுகாதாரத் துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் தீவிரமான நிலையில் பீலா ராஜேஷ் மாற்றப்படலாம் என்று தகவல் வெளிவந்தது.
இதுதொடர்பாக நாம் [பீலா இடத்தில் ராதா?](https://minnambalam.com/politics/2020/04/11/31/health-department-seceratary-beela-rajesh-may-be-replace-by-radhakrishnan) என்று வெளியிட்ட செய்தியில், “சுகாதாரத் துறை செயலாளர் பதவியை டாக்டர் பீலா ராஜேஷிடம் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு இந்த அசாதாரண நேரத்தில் கொடுக்கலாமா என்றும், இந்த அசாதாரண நேரத்தில்தானே கொடுக்க வேண்டும் என்று இரு வேறு விவாதங்கள் அரசின் தலைமைக்குள் நடந்துகொண்டிருக்கின்றன” என்று சொல்லியிருந்தோம்.
இதனிடையே கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணனை தமிழக அரசு மே 1ஆம் தேதி நியமித்தது. அதன்பிறகு கொரோனாக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் முழு வீச்சீல் ஈடுபட்டு வந்தார்.
கும்பகோணம் தீவிபத்து, சுனாமி, பல புயல், வெள்ளங்களில் நிவாரண நடவடிக்கைகளிலும் மீட்பு நடவடிக்கைகளிலும் மக்களோடு மக்களாக இருந்து திறம்பட செயலாற்றி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். பெயர் பெற்றவர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமெடுக்கும் நிலையில் ராதாகிருஷ்ணன். மீண்டும் சுகாதாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
**எழில்**
[சென்னையைக் காப்பாற்ற ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். நியமனம்!](https://minnambalam.com/public/2020/05/01/55/radhakrishnan-ias-appointed-for-save-chennai-from-corona)
�,