சமையலுக்குச் சுவை சேர்க்கும் சிறிய வெங்காயத்தைப் பயன்படுத்தி லேகியம் தயாரித்து ரிலாக்ஸ் டைமில் சுவைக்கலாம். இது கெட்ட கொழுப்பைக் குறைத்து உடலுக்கு பலவிதத்தில் ஊட்டம் தரும்.
**எப்படிச் செய்வது?**
300 கிராம் சின்ன வெங்காயம், ஒரு முழு பூண்டைத் தோல் நீக்கி சுத்தம் செய்யவும். அரை டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்துக்கொள்ளவும். நான்கு ஏலக்காயைத் தூளாக்கிக்கொள்ளவும். 150 கிராம் வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும். சுத்தம் செய்த வெங்காயம், பூண்டை இடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இடித்த வெங்காயம், பூண்டை போட்டு அதனுடன் ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து வேகவைத்து குழைக்கவும். அடுத்து கரைத்த வெல்லத்தை சேர்த்து ஐந்து நிமிடம் கிளறிவிட்டு வேகவைக்கவும். அத்துடன் வறுத்து தூளாக்கிய வெந்தயம், சீரகம் போன்றவற்றைச் சேர்க்கவும். அடுத்து ஒரு சிட்டிகை சுக்குத்தூள், ஏலக்காய்த்தூளை சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி இறக்கவும்.
இதை ஒரு பாட்டிலில் அடைத்துவைத்து மூன்று நாட்கள் வரை சாப்பிடலாம். இதனுடன் சேர்த்து தண்ணீரோ, தேனீரோ பருகக்கூடாது.
**சிறப்பு**
சின்ன வெங்காயத்தில் கரையும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. உடல் நலனுக்கு தேவையான அலிசின் என்ற சல்பைட்டும் இதில் உள்ளது. இது கொழுப்பை கரைக்கும் தன்மையை பெற்றிருக்கிறது. வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதையும், ரத்த புற்றுநோய், சரும புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றையும் தடுக்கும் தன்மைகொண்டது. இந்த லேகியம் தம்பதிகளின் உடலுக்கு பலவிதத்தில் ஊட்டம் தரும்.�,